Header Ads



கட்சிக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ள, நடவடிக்கை எடுங்கள் - ரணில் உத்தரவு


இரண்டரை வருடங்களாக தேசிய அரசாங்கத்தினூடாக ஐக்கிய தேசியக் கட்சி கிராமங்களுக்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அதனைப் பிரசாரப்படுத்துவதற்கு எந்தவித அரச நிதியும் செலவிடவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது பிரசாரங்களுக்காக பெருந்தொகை அரச நிதியை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி கல்வி, வீதி அபிவிருத்தி, மதத் தலங்களைப் புனரமைத்தல், சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களையும் கிராம மட்டத்தில் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குமான விசேட மாநாட்டி போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த இரண்டரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். சகல தேர்தல் சட்டங்களையும் முறையாக பாதுகாத்து ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு முன்மாதிரியாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் செயற்படுவது அவசியமென இதன் போது வேட்பாளர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் பிரதமர் அறிவுறுத்தல்கள் வழங்கிய அவர் தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் அவர்களுக்கு விசேட பணிப்புரைகளையும் வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிராமப்புற மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் புதிய முறைமையின் கீழ் இடம்பெறும் இம்முறை தேர்தலில் வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

1 comment:

  1. கிராமப்புறங்களுக்கு இந்த அரசாங்கம் பல சேவைகளைச் செய்துள்ளதா? அல்லது ஐ.தே.க. செய்துள்ளதா? கட்சி செய்திருந்தால் நாட்டு சனாதிபதியின் நிலைப்பாடு என்ன? மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மக்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திவிட்டு அதை ஏன் கட்சியின் பெயரைப் போட்டுக் கொள்ள எத்தனிக்கின்றீர்கள். உங்கள் சொந்தப் பணத்தால் வேலை செய்துவிட்டு சொல்லிக்காட்டுங்கள். மக்களின் பணத்தை வேலை செய்து நாட்டை முன்னேற்றும் பெயரில் மக்கள் பணத்தைச் சூறையாடிவிட்டு வீரம் பேசி தாங்களை விளம்பரம் செய்ய வேண்டுமா?

    ReplyDelete

Powered by Blogger.