Header Ads



ஹஜ் மானியம் ரத்து - இந்திய அரசு அறிவிப்பு


இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.

'சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டாலும், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து ஒன்றேமுக்கால் லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செய்வார்கள்' என செய்தியாளர்களிடம் பேசிய நக்வி தெரிவித்தார்.

"ஹஜ் மானியமாக அளிக்கப்பட்டுவந்த நிதி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்" என்றும் நக்வி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்புவதற்கு சௌதி அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இதற்கான நடைமுறைகளை இரு அரசுகளும் இறுதிசெய்ய வேண்டியுள்ளது என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.

"இந்த மானியத்தைப் பெற்று ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான விமானக் கட்டணமாக (மும்பை - ஜெட்டா - மும்பை)கடந்த ஆண்டு 58 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது நீங்கள் அந்த மார்க்கத்தில் விமானப் பயண டிக்கெட் வாங்கினால் சுமார் 30 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. ஆக, ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது" என்கிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜவாஹிருல்லா.

இப்போது ஹஜ் மானியத்தை ரத்துசெய்திருப்பதால், இனிமேலும் ஏர் இந்தியாவில் பயணம் செய்ய யாத்ரீகர்களை வலியுறுத்தக்கூடாது என்கிறார் அவர். இந்த மானியத்தை ரத்துசெய்திருக்கும் அரசு, கும்பமேளாக்களுக்கு செலவுசெய்யும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிறுத்துமா என்றும் கேள்வியெழுப்புகிறார் அவர்.

மானியத்தை ரத்துசெய்வதால் சேமிக்கப்படும் பணத்தை சிறுபான்மையினரின் கல்விக்காக செலவழிக்கப்போவதாகச் சொல்வதை அவர் ஏற்கவில்லை. "அவ்வளவு அக்கறை இருந்தால் மிஸ்ரா, சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதுதானே?" என்று கேள்வியெழுப்புகிறார் ஜவாஹிருல்லா.

ஆனால், இந்த அறிவிப்பை இந்திய தேசிய லீக் கட்சி வரவேற்றுள்ளது. "ஹஜ் யாத்திரை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே இஸ்லாத்தில் கட்டாயம். ஆகவே இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியிருப்பதில் எந்த வருத்தமும் இல்லை. இந்த மானிய உதவியை வைத்துத்தான் இந்து அமைப்புகள், நாங்கள் அரசிடம் பிச்சையெடுத்து ஹஜ் போவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தன. இப்போது மானியம் நிறுத்தப்பட்டிருப்பதால் அந்த அவப்பெயர் எங்களுக்கு நீங்கும். அதை நாங்கள் வரவேற்கிறோம்" என்கிறார் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெ. அப்துல் ரஹீம்.

2022ஆம் ஆண்டிற்குள் ஹஜ் மானியத்தை ரத்துசெய்யும்படி கடந்த 2012ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒன்று உத்தரவிட்டது.

இஸ்லாமியர்களின் புனிதக் கடமையான ஹஜ் பயணத்திற்கு, 1932ஆம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 1959ல் இதற்கான சட்டம் திருத்தப்பட்டு, மத ரீதியான கடமைகளுக்காக சௌதி அரேபியா, சிரியா, ஜோர்டன், இரான், இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மானியம் அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1973ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 பேர் இறந்துவிடவே, கப்பல் பயணத்தை ரத்துசெய்த இந்திய அரசு, விமானம் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தது. அதற்கேற்ற வகையில் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 836 கோடி ரூபாய் அளவுக்கு இந்த மானியத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மானியம் சுமார் 400 கோடியாக குறைக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டில் மானியம் பெற்று 1.25 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர்.

3 comments:

Powered by Blogger.