Header Ads



உலக வாழ்வின் ரகசியம் (என் இனிய கிருஸ்துவ நண்பர்களுக்காக)

-HOORULEEN LEEZA-

நபி ஈஸா (அலை) அவர்கள் வெகுதூரம் பயணப்பட்டு போய்க் கொண்டிருக்கும் போது ஒரு வழிப்போக்கன் ஒருவன் தானும் நபிகளாருடன் பயணப்படுவதாக வற்புறுத்தினான் . நபி ஈஸா (அலை) அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.

வெகு தூரம் சென்ற பின் காலை உணவு சாப்பிடுவதற்கு நபியவர்கள் தான் கொண்டு வந்திருந்த 3 ரொட்டிகளை வைத்து விட்டு ஒலுகு செய்து விட்டு வந்துப் பார்த்த போது மூன்று ரொட்டில் இரண்டு ரொட்டியை வழிப்போக்கன் தின்று விட்டான்." தாங்கள் கொண்டு வந்த இரண்டு ரொட்டில் ஒன்றை மட்டும் நான் தின்றேன் , மீதி ஒன்று இதோ உங்களுக்கு " என்றான்

நபியவர்கள் மூன்றாவது ரொட்டியைப் பற்றி விசாரித்தார்கள் .தனக்குத் தெரியாது என்பதாக வழிப்போக்கன் கூறினான்.

பயணம் தொடர்ந்தது .

வழிப்போக்கன் " நபியே .. தாங்கள் எனக்கு இவ்வுலக வாழ்க்கையின் ரகசியம் பற்றி ஓர் அற்புதத்தோடு சொல்லுங்களேன்" என்றான்

நபியவர்கள் மூன்று கூழாங்கற்களை ஜொலிக்கும் மூன்று தங்கக் கட்டிகளாக மாற்றினார்கள் . வழிப் போனுக்கு ஒன்றை கொடுத்து மீதி இரண்டில் ஒன்றை தான் எடுத்து கொண்டு மீதி ஒன்றை தனியே வெளியே வைத்தார்கள்.

வழிப்போக்கன் "இது யாருக்கு ?" என்று நபிகளாரிடம் கேட்டான். அதற்கு அவர்கள் "மூன்றாவது ரொட்டியை எவன் சாப்பிட்டானோ அவனுக்கு " என்றார்கள்

உடனே வழிப்போக்கன் 3வது ரொட்டியையும் தான்தான் சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டான். நபியவர்கள் மூன்று தங்க கட்டிகளையும் அவனிடமே கொடுத்து விட்டு, " இந்த 3 தங்க கட்டிகள் இவ்வுலக வாழ்வின் ரகசியத்தைச் சொல்லும் " என்று சொல்லி விட்டு வழிப்போக்கனை அங்கேயே விட்டு விட்டு தனியே பயணப்பட்டார்கள் .

வழிப்போக்கனிடம் இருந்த 3 தங்க கட்டிகளை இரண்டு திருடர்கள் பார்த்து விட்டு வழிப்போக்கனிடம் "உன்னை கொலை செய்து விட்டு இத்தங்க கட்டிகளை கொண்டு செல்ல எங்களால் முடியும் இருந்தாலும் , ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக் கொள்வோம் என்றனர்.

வழிப்போக்கனும் இதற்கு ஒத்துக்கொண்டான். "எனக்கு பசிக்கிறது உணவு உடனே வாங்கிக் கொண்டு வாருங்கள் " என்றான் வழிப்போக்கன்

திருடர்கள் இருவரில் ஒருவன் வழிப்போக்கனோடு இருந்து கொண்டான். இன்னொரு திருடனை உணவு வாங்க அனுப்பி வைத்தான்.

உணவு வாங்க வந்த திருடன் இரண்டு உணவுப் பொட்டலத்தில் விஷத்தை கலந்து, "அந்த இருவர் இந்த உணவுகளை உண்டு செத்ததும் 3 தங்க கட்டிகளும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று சூழ்ச்சியுடன் நடந்து கொண்டான்

இங்கிருந்த வழிப்போக்கனும் இன்னொரு திருடனும் ஒன்று சேர்ந்து ,

" உணவு வாங்கி கொண்டு வரும் அந்த திருடனை இருவரும் சேர்ந்து கொன்று விட்டால், 3 தங்க கட்டிகளை நாம் இருவரும் பங்கிட்டுக் கொள்வோம" என்று இவர்கள் சூழ்ச்சி செய்தனர்.

உணவு வாங்கி வந்த திருடனை இருவரும் கொலை செய்தனர்.

பின் ஆற அமர உட்கார்ந்து அவன் கொண்டு வந்த உணவை இருவரும் சாப்பிட்டனர் . விஷம் தலைக்கேறி இந்த இருவரும் செத்தனர்.

மூன்று தங்கக் கட்டியும் அதனைச் சுற்றி 3 பிணங்களும்.கிடந்தன. அவ்வழியே மீண்டும் ஈஸா (அலை) அவர்கள் திரும்பி வந்தனர். நபிகளாருடன் சேர்ந்து வந்தவர்களிடம் , வழிப்போக்கனின் கதையையும் தங்க கட்டி பறிப்போனதையும் சொல்லி "இது தான் உலக வாழ்வின் ரகசியம் " என்றார்கள்

No comments

Powered by Blogger.