Header Ads



களைகட்டுகிறது தேர்தல் திருவிழா, ஆசனப்பங்கீட்டுப் பேச்சுகள் தீவிரம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரியில் நடைபெறவுள்ள நிலையில், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஒருபுறத்தில் கூட்டணி அமைத்தல், ஆசனப்பங்கீட்டுப் பேச்சுகள் இடம்பெற்றுவரும் நிலையில் மறுபுறத்தில் கட்சிதாவும் படலமும் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இனிவரும் நாட்களில் அனல் பறக்கும் பேச்சுகளாலும், அதிரடி அறிக்கைகளாலும் தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டரசின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்தே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியானது அதன் யானை சின்னத்தின் கீழ் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.தே.கவுடன் இணைந்து யானை சின்னத்திலேயே பெரும்பாலான தொகுதிகளில் களமிறங்கவுள்ளன.

இது குறித்தான பேச்சுகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் இரவும் அலரிமாளிகையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் தனித்துக் களமிறங்கவுள்ளது. எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நுவரெலியாவிலும், முஸ்லிம் கட்சியொன்று விடுத்த கோரிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பிலும் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதன்போதும் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுனவும் தாமரை மொட்டு சின்னத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ஜே.வி.பி,, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆகியனவும் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது மாத்தளை, கண்டி, வவுனியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை, ஏனைய பகுதிகளில் மைத்திரி அணியுடன் இணைந்து களமிறங்கவுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கைகோப்பதற்கு பல அமைப்புகள் முன்வந்துள்ளன. கட்சியின் உயர்பீடத்தைச் சந்தித்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஈ.பி.டி.பியானது வடக்கில் வீணையில் களமிறங்கினாலும் ஏனைய பகுதிகளில் மைத்திரி அணியுடன் கூட்டணி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.