Header Ads



கறுப்பு ஆடுகளை தூக்க, ஜனாதிபதி திட்டம்

மஹிந்த தலைமையிலான பொது எதிரணிக்குச் சார்பாகச் செயற்பட்டுவரும் தொகுதி அமைப்பாளர்களின் பதவியை ஒரேடியாகப் பறிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு மஹிந்த அணியுடன் செயற்பட்டுவரும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பாக செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கட்டம் கட்டமாகவே ஜனாதிபதி மைத்திரி பதவி நீக்கி வந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே அவரின் வியூகம் அமைந்தது. எனினும், மஹிந்தவின் விசுவாசிகள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையிலேயே கறுப்பு ஆடுகளை ஒரேயடியாகத் தூக்கும் முடிவுக்கு கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரி வந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருப்பவர்கள் கட்சியை விமர்சித்து, மஹிந்தவுக்கு சார்பாக செயற்பட்டால், தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் சு.கவிலிருந்து வெளியேறினால் அது கட்சிக்குப் பாதிப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு மைத்திரி வந்துள்ளார்.
2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துக் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.