Header Ads



மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது - ஐ.நா. திட்டவட்டம்

பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, "இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

ரகைன் மாகாணத்தில் "மோசமான ராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமியர்களான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர். ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் என மியான்மர் கூறுகிறது.

ரகைன் மாகாணத்தில் நடக்கும் தற்போதைய நடவடிக்கை,"சமமற்ற நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது" என ஹுசைன் கூறியுள்ளார்.

"பாதுகாப்பு படையினரும், உள்ளூர் ராணுவமும் ரோஹிஞ்சா கிராமங்களை கொளுத்தியதற்கான பல ஆதாரங்களும், செயற்கைக்கோள் படங்களுக்கு எங்களுக்கு கிடைத்துள்ளன. தப்பியோடும் பொதுமக்களை சுடுவது உட்பட சட்டத்திற்கு புறம்பான கொலைகளின் எண்ணிக்கையும் தொடர்கின்றன" என்கிறார் சையத் ராவுத் அல் ஹுசைன்.

"மியான்மரில் நடந்த அனைத்து வன்முறைக்கும் பொறுப்பு ஏற்பதுடன், தற்போது நடக்கும் மோசமான ராணுவ நடவடிக்கையையும் நிறுத்த வேண்டும் என மியான்மர் அரசிடம் நான் கேட்டுள்ளேன். மேலும், ரோஹிஞ்சா மக்களுக்கு எதிரான பரவலான பாகுபாடு எண்ணத்தையும் மாற்ற வேண்டும் என கேட்டுள்ளேன்" என்கிறார் ஹுசைன்.

அடைக்கலம் தேடி 3.13 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளதாக அண்மைய அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள மக்களுக்கு உணவும், வசிக்க இடமும், மருத்துவ உதவியும் அவசியம் தேவை என உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது அங்கு இருக்கும் பொருட்கள் போதுமானதாக இல்லை.


1 comment:

  1. Stop passing statements But take Action to protect the people

    ReplyDelete

Powered by Blogger.