Header Ads



14 குழந்தைகளின் தாய், கோடீஸ்வரியான வரலாறு

வர்ஜீனியாவில் வசிக்கும் தம்மியின் இயற்கை ஒப்பனைப் பொருட்கள் தொழிலின் மதிப்பு 17 லட்சம் அமெரிக்க டாலர்! இவர் இதுவரை தனது தொழிலுக்காக வங்கிக் கடனோ, வேறு முதலீட்டுக் கடன்கள் எதையுமோ பெறவில்லை என்பது ஒரு சிறப்பு.

14 குழந்தைகளுக்கு தாயான தம்மி உம்பேலின் கணவர் டாக்டர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். கோடீஸ்வரக் குடும்பத்தில் ஒரு தொலைகாட்சிப் பெட்டி கூட இல்லை என்பது ஆச்சரியமளிக்கும் கூடுதல் தகவல்.

குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி

உம்பேல் தன் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே படிக்க வைக்கிறார். அவரின் குழந்தைகளில் நான்கு பேர் கல்லூரிகளில் பயில்கின்றனர். மருத்துவம், பொறியியல், இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அவர்கள் கல்வி கற்கின்றனர்.

மீதமுள்ள பத்து குழந்தைகளுக்கும் வீட்டில் தானே கற்றுக் கொடுக்கிறார் தம்மி உம்பேல்.

பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையில் விளையும் பொருட்களை ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அவற்றை தனது தயாரிப்புக்கு பயன்படுத்துவதற்காக இவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, அப்போது குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பார் தம்மி?

தொழில் விரிவாக்கம் மற்றும் குடும்பம் குழந்தை என அனைத்தையும் ஒரே நேரத்தில் சிறப்பாக நிர்வகிக்கிறார் இவர். தொழிலுக்காக பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையிலும், குழந்தைகளை தன்னுடனே அழைத்துச் செல்கிறார்.

பல்வேறு இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதும் கல்வியின் ஓர் அங்கம் என்று தாம் நம்புவதாக தம்மி கூறுகிறார்.

இயற்கை ஒப்பனை பொருட்கள் வணிகம்

'தொழிலை பராம்பரிய முறையில் நடத்தவே விரும்புகிறேன். அதன்படி முதலில் பணம் சம்பாதிக்கவேண்டும், பிறகு முதலீடு செய்யவேண்டும். அதன்படியே நான் செயல்படுகிறேன். நான் இதுவரை கடன் வாங்கி தொழில் செய்வது பற்றி யோசித்துக்கூட பார்த்ததில்லை` என்கிறார் தம்மி உம்பேல்.

தொடக்கத்தில் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தையே நடத்தினார் இவர். ஆனால் அதில் அதிக முன்னேற்றம் கிடைக்காததால், தொழிலை மாற்றிக்கொண்டார்.

'ஷியா டெரா ஆர்கெனிக்' நிறுவனத்தை துவங்கிய உம்பேல், பழங்குடி இனக் குழுக்கள் மற்றும் எகிப்து, மொராக்கோ, நாமீபியா அல்லது தன்ஜானியா போன்ற நாடுகளில் உள்ள சிறு குழுக்களிடமிருந்து மூலப்பொருட்களைக் பெற்று இயற்கை ஒப்பனைப் பொருட்களை தயாரிக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம், மேற்கத்திய நாட்டு மக்களுக்குப் பல பொருட்களை அறிமுகப்படுத்தினார்.

பல கிராமங்களுக்கு பயணம்

சரும சிகிச்சைக்காக தற்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் கிராமங்களுக்கு சென்று ஆராய்ந்து, தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

'வாழ்வாதாரத்திற்கே சிரமங்களை எதிர்கொண்டிருந்த அந்த இடங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சித்தேன். இயற்கையின் நன்கொடையான பல்வேறு மூலிகைகள் அங்கிருப்பதை நான் உணர்ந்தேன், ஆனால் அவை மக்கள் அணுகக்கூடிய சந்தையில் இருந்து வெகுதொலைவில் இருந்தன` என்கிறார் தம்மி.

வர்ஜீனியாவில் உள்ள உம்பெலின் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகம் மூலமாக விற்பனையில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுக்க 700 கடைகளும் உள்ளது.

போலி தாயாரிப்புகளே போட்டி

'இயற்கை பொருட்கள் என்ற பெயரில் பல போலி பொருட்கள் சந்தையில் உலா வருகின்றன, இதனால் அசலுக்கும் போலிக்கும் உள்ள வேறுபாட்டை அறிவதில் வாடிக்கையாளருக்கு சிக்கல் எழுகிறது' என்கிறார் தம்மி.

சந்தையில் நிலவும் போட்டிச் சூழலில் நிலைத்து நிற்பது கடும் சவால் என்று கூறினாலும், தனது தயாரிப்புகளில் தரத்தில் சமரசம் செய்துக் கொள்ளாமல் இருப்பதே தன்னுடைய தாரக மந்திரம், எந்த நேரத்திலும் அதை கடைபிடிப்பதே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் தம்மி உம்பெல்.

No comments

Powered by Blogger.