Header Ads



மகிந்தவுக்கு அச்சத்தை ஏற்படுத்தும், அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தலதா

இன்றைய தினம் நீதியமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள தலதா அத்துக்கோரள   முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சில அறிவிப்புகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுத்துள்ளார்.

எந்த காரணத்துக்காக நீதியமைச்சு பதவியிலிருந்த விஜேதாஸ ராஜபக்ச நீக்கப்பட்டாரோ அந்த காரணங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் தலதா அத்துக்கோரள சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

அந்த வகையில், விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள ராஜபக்சக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கும், அவற்றுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் எதற்காக மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பது குறித்து அறிந்து கொள்வதற்குமே விசேட அறிக்கையை கோரியுள்ளதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவன்கார்ட் விவகாரம், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள், மகிந்தவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மீதான வழக்குகள் உட்பட பல வழக்குகளுக்கான கோவைகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவின் இந்த அறிவிப்பால் மகிந்த தரப்பினரிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக புதிய நீதியமைச்சரின் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த மகிந்த ராஜபக்ச, நீதியமைச்சரின் நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்த போவதாக கூறியிருந்தார்.

அத்துடன், தன்னை பழிவாங்கும் நோக்கிலேயே தலதா அத்துக்கோரளவை நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவின் நடவடிக்கையால் மகிந்த ராஜபக்சவின் எதிர்காலம் இறுக்கமடைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.