Header Ads



இளவரசரை கைது செய்யுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு

செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவரை கைது செய்ய செளதி அரசர் சல்மான் பின் அப்தெலாஜிஸின் உத்தரவிட்டார்.

இதுபோன்ற வேறு எந்தவிதமான மீறல்களிலும் இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரியாத் போலீஸால் கைது செய்யப்பட்டதாக செளதி அரேபிய அரசின் அல்-இக்பரியா தொலைகாட்சியின் @alekhbariyatv என்ற டிவிட்டர் செய்தி கூறுகிறது.

"அநீதி, சர்வாதிகாரம், துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிப்பது போன்றவற்றை தடை செய்யும்விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது; இது ஷரியாவின் நியாயமான ஆட்சியை நடைமுறைப்படுத்தும் முறை என்றும் அல்-இக்பரியா தொலைகாட்சியின் அடுத்த டிவிட்டர் செய்தி விளக்கம் அளித்துள்ளது.

வீடியோவில் இளவரசருடன் காணப்படும் தனிநபர்கள், அவர்களுக்கு எதிரான சட்ட ஆணை வரும் வரை விடுவிக்கப்படமாட்டார்கள் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாக, செளதி அரசின் நிதியுதவி பெறும் அல்-அரபியா செய்தி வெளியிட்டுள்ளது.

செளதி அரேபியாவின் அரச குடும்பத்தை விமர்சிக்கும் செளதி செளதி சமூக ஊடகத்தைச் சேர்ந்த கென்னெம் அல்-துசாரி, ஜூலை 19ஆம் தேதியன்று ஒரு திருத்தப்பட்ட வீடியோவை ட்வீட் செய்தார், அதில், செளதி இளவரசர் பலரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, பெண்களையும், ஆண்களையும் அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ 2,600 முறை மறு ட்வீட் செய்யப்பட்டது.

"முடிவெடுப்பதில் அரசர் காட்டும் வேகமானது, அவர் எல்லா விசயங்களிலும் மக்களுடன் நெருக்கமாக இருப்பதை காட்டுகிறது. துரிதமான முடிவெடுக்கும் திறன் கொண்ட, உறுதியான அரசரை கடவுள் காப்பாற்றட்டும்" என்று செளதி தொலைகாட்சியின் தொகுப்பாளர் மற்றும் நடிகரான அப்துல் கரீம் அல் ஹர்பி டிவிட் செய்துள்ளார்.

எனினும், தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

"தாக்குதல் நடத்தியவர் இளவரசர்தான் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. மேலும், கடைசி காட்சியில் காட்டப்படும் வீடு இளவரசருடையதா? என்று கேள்வி எழுப்புபவர்கள், அந்த வீடு சாதாரண மக்களுடையதைப் போன்றே தோன்றுவதாகவும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தாலும், வாகனம் சென்றுக் கொண்டேயிருக்கும்" என்று @Ma100Da கூறுகிறார்.

வீடியோவை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும் கைது நடவடிக்கையை செளதி ஊடகங்கள் உறுதிசெய்தன.

BBC

No comments

Powered by Blogger.