Header Ads



முசலி: முயற்சிகள் ஒருமுகப்படட்டும்..!

(05.04.2017 அன்று விடிவெள்ளி பத்திரிகையில், வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

முசலி பாதுகாப்பு வன வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராய்வதற்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளது.  தேசிய ஷூரா சபை இதனை ஏற்பாடு செய்துள்ளது.

21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடனான இந்த ஆலோசனை மன்றத்தில் துறை சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மற்றும் தேசிய முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து வன பிரகடனம் தொடர்பில் முஸ்லிம்கள் தரப்பில் அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்கள் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மற்றொரு அம்சமாகவே இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளது.

ஏலவே கடந்த வெள்ளிக் கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான சிவில் சமூக பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர்  ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்துப் பேசியிருந்தனர். 

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் வட மாகாண சிவில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்புகளின் போது குறித்த வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதியின் செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். 

எதிர்வரும் 27 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அப் பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராயவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மறிச்சுக்கட்டி பள்ளிவாசல் முன்பாக அப் பகுதி முஸ்லிம்கள் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றனர். குறித்த வர்த்தமானி பிரகடனத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும் என அம் மக்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் வெவ்வேறு முஸ்லிம் தரப்புகளால் வெவ்வேறு கோணங்களில் கையாளப்படுகிறதா எனும் அச்சமும் மேலெழுகிறது. இது நமது போராட்டங்களையும் அபிலாஷைகளையும் பலமிழக்கச் செய்யக் கூடும். 

எல்லோரும் சமூக நலன்கருதியே இந்த விடயத்தில் அக்கறை காட்டுகின்ற போதிலும் தமது அரசியல் மற்றும் கொள்கை இடைவெளிகளால் பிரிந்து நின்று செயலாற்றுவது கவலைக்குரியதாகும். 

இதுவிடயத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அவசியமாகும். இன்றேல் நமது மக்களின் பூர்வீகம் நம் முன்னே பறிபோவதை தடுக்கமுடியாது போய்விடும். 

No comments

Powered by Blogger.