முஸ்லிம்களின் நிலை, தலைகீழாக மாறிவிட்டது - சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்
-ARA.Fareel-
கே: கடந்த வாரம் ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்திய வன பிரதேச வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏன் பலத்த எதிர்ப்பு வெளியிடப்படுகிறது?
ஜனாதிபதி காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி ஏன் அவசரப்பட்டு வெளியிடப்பட்டது எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி தனது ரஷ்ய விஜயத்தின் போதே இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு கையொப்பமிட்டுள்ளார். இனவாத சூழலியலாளர்களின் அழுத்தங்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளன. முஸ்லிம் மக்கள் வன பிரதேசங்களை எதிர்க்கவில்லை. அவை பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு பிரதேசம் வன பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பு அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும். அப்பகுதியின் காணி உரிமையாளர்களின் கருத்துகள் பெறப்பட வேண்டும். மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். பிரதேச செயலாளர், மக்கள் பிரதிநிதிகள், மீள் குடியேற்ற அமைச்சு, மீள் குடியேறவுள்ள மக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமலே வன பிரதேசமாக அவசர அவசரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் சமூகமே பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
கே: இந்தப் பிரகடனத்தில் எந்தப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன? எவ்வளவு நிலம் உள்வாங்கப்பட்டுள்ளது?
மாவில்லு, வெப்பல், கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, விலத்திக்குளம் மற்றும் பெரிய முறிப்பு ஆகிய ஒதுக்குக் காடுகளுக்கு உரியதான காட்டுப் பிரதேசமே 2017 மார்ச் 21 ஆம் திகதியிலிருந்து மாவில்லு பேணற்காடு என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது 40030.525 ஹெக்டெயர் விஸ்தீரனத்தைக் கொண்டதாகும்.
கே: 2012 ஆம் ஆண்டும் காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டதல்லவா?
ஆம். 2012 மே மாதம் 11 ஆம் திகதி அப்போதைய சுற்றாடல் அமைச்சராக இருந்த அநுர பிரியதர்சன யாப்பாவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி விளாத்திக்குளம் காட்டின் 15000 ஹெக்டேயர் விஸ்தீரனத்தைக் கொண்ட பிரதேசம் விலாத்திக்குளம் ஒதுக்கக்காடு என பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தப் பிரகடனம் 2012 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது.
கே: குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் சட்ட ரீதியாக குடியேற்றப்பட்டார்களா?
ஆம். ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளுக்கேற்ப காணிக் கச்சேரி நடத்தப்பட்டு கட்டம் கட்டமாக மக்கள் குடியேற்றப்பட்டார்கள். மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் மக்கள் பூர்வீகக் காணிகளைக் கொண்டிருந்துள்ளார்கள். 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டப்படும்வரை அவர்கள் தங்கள் வாழ்விடங்களைக் கொண்டிருந்துள்ளார்கள்.
கே: 2012 ஆம் ஆண்டு வன பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மக்களால் சமூக பிரதிநிதிகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?
பதில்: இந்த பிரகடனமும் மக்களுக்குத் தெரியாமல் அவர்கள் அறியாது அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படாதே அறிவித்தல் செய்யப்பட்டது. அப்பகுதியில் வாழும் மக்களைக் கலந்துரையாடாது பிரகடனப்படுத்தப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது. இதனை சட்டவிரோதமானதாக குறிப்பிட்டு இல்லாமற் செய்ய வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சார்பில் ஆப்தீன் அசோசியேசன்ஸ் எனும் சட்ட நிறுவனம் வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டுமென நீதிமன்றிடம் கோரப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது.
கே: முசலி பிரதேச செயலகப் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அதாவது 1990 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வளவு பேர் இருந்துள்ளார்கள்?
1981 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். 1990 ஆம் ஆண்டு முசலி செயலக பிரிவில் வாழ்ந்த மக்களில் 84.0 வீதமானோர் முஸ்லிம்கள், 13. 4 வீதமானோர் தமிழர்கள், 2.6 வீதமானோர் சிங்களவர்களாவார்கள்.
கே: மீள் குடியேற்றப்பட வேண்டிய முஸ்லிம்களில் எத்தனை விகிதத்தினர் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்?
முஸ்லிம்களில் 20 வீதமானோர் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேலும் 80 வீதமானோர் குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.
கே: 2017 ஆம் ஆண்டின் மாவில்லு பேணற்காடு என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் மக்கள் குடியிருக்கிறார்களா?
ஆம். குடியிருக்கிறார்கள். மக்களுக்கு காணி உறுதிகள், காணி அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றன. இவை கவனத்திற் கொள்ளப்படாது அவசர அவசரமாக கசெட் பண்ணப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இனவாதிகள் இருந்துள்ளார்கள். இவர்கள் ஜனாதிபதியை தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள். வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கு ஒரு முறை இருக்க வேண்டும். ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவசியம் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்றால் மக்களுக்கு மாற்றுக் காணிகள், நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கே: RRT அமைப்பின் செயலாளராக இருக்கும் நீங்கள் சமூகத்துக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?
முஸ்லிம் சமூகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியையும் நல்லாட்சி அரசினையும் பதவிக்கு கொண்டுவர பங்காளர்களாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இது எமது சமூகத்தின் பிரச்சினை. எமது உரிமை, எமது வாழ்விடங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாம் போராட வேண்டும். அரசியல் தலைமைகள் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். இனவாதிகளுக்குப் பயந்து அமைதியாகி விடக்கூடாது என்றார்.

It's must to give an ultimatum to this draconian government. If my3 fail to reverse his decision, then Rishad must step down from all his position.
ReplyDelete