விமலுக்கு மீண்டும் ஏமாற்றம்
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தாக்கல் செய்த பிணை விண்ணப்பத்தை, கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 90 மில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிணை வழங்கப்படாத நிலையில் அவர் சுகமடையும் வரை தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment