Header Ads



ரணில் செய்வது திருட்டே எனச்சொல்லி, தகாத வார்த்தைகளை வெளியிட்டவரின் உரை நீக்கம்

பல திருடர்கள் இன்றும் சுதந்திரமாக இருக்க, விமல் வீரவங்ச இன்று சிறையில் இருட்டறையில் இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

திருடர்கள் இன்று சுதந்திரமாக திரிகின்றார்கள். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட விமல் வீரவங்ச இன்று சிறையில் இருக்கின்றார். இது முறையற்ற செயல்.

ஊழல்களை இல்லாமல் செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த இப்போதைய அரசு திருட்டையே செய்து கொண்டிருக்கின்றது. ரணில் விக்ரமசிங்கவாக இருக்கட்டும் அவரும் செய்வது திருட்டே.

பைத்தியக்காரர்களே இப்போது ஆட்சியில் இருக்கின்றார்கள் எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

இவரது உரை பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அதே சமயம் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் அமைந்திருந்தது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் குழப்பநிலையும் கூச்சலும் ஏற்பட்டது. அத்தோடு விமலவீர திஸாநாயக்கவின் உரையை சென்சார்ட் மூலம் அகற்றக் கூறியும் பலவித கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே பாராளுமன்ற நீதிக்கு அமைய விமலவீர திஸாநாயக்கவின் உரையின் சில பகுதிகள் அகற்றப்பட்டு தடை செய்யப்படுவதாக சபைத்தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து “பாராளுமன்றத்திற்கு கஞ்சா குடிப்பவர் வந்து தகாத முறையில் பேசிக் கொண்டு இருக்கின்றார், அவரது பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள் என பல உறுப்பினர்களும் கூச்சலிட்டனர்.

எனினும் அதற்கு “பைத்தியக்காரர்கள் என்னைப் பற்றி பேசத் தேவையில்லை, இப்போது நடைபெறுவது நல்லாட்சி அல்ல கழிப்பறை ஆட்சி அதனை செய்பவர் ரணில்” எனவும் விமலவீர திஸாநாயக்க ஆவேசத்தோடு உரையாற்றினார்.

இவரது உரை காரணமாக உறுப்பினர்கள் ஆசனங்களை விட்டு எழுந்து கூச்சலிட்டதால் பாராளுமன்றம் அமைதியிழந்து கூச்சல் களமாக மாறி பதற்ற நிலையோடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.