Header Ads



வசீம் கொல்லப்பட்ட தினம், மஹிந்தவின் முக்கிய ஆவணங்கள் அழிப்பு

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை செய்யப்பட்ட தினம் மற்றும் அதனை அண்டிய தினங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவினால் பேணப்பட்டு வந்த நாளாந்த குறிப்பேட்டு ஆவணத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டோ வெட்டி அகற்றப்பட்டோ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் நேற்று -30- கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் படையணி, அன்றாட நடவடிக்கைகள் தொடர்பில் பதியும் ஓர் ஆவணத்தைப் பேணி வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினம் மற்றும் அதனை அண்டிய நாட்களில் இந்த ஆவணத்தின் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

2012ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரையிலான காலப்பகுதிக்கான குறிப்புக்கள் அடங்கிய பக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணம் தொடர்பில் பொறுப்பாக கடயைமாற்றிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் தொடர்பான விபரங்கள் வழங்குமாறு கடற்படையினரிடமும், இராணுவத்தினரிடமும் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தாஜூடின் இறுதியாக பயணம் செய்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற நபர் பற்றிய விபரங்களை திரட்ட குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 5ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கீ அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.