தனது பரிந்துரைகள் முக்கியமானவை என ஹுசேன் விடாப்பிடி - நழுவியது சிறீலங்கா
சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், தமது கருத்துக்களை வெளியிட்டன. முடிவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதிலுரை இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர், ‘சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என்று இல்லை. எல்லாப் பரிந்துரைகளுமே முக்கியமானவை.
சிறிலங்கா அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நம்புகிறது.
கடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு சிறிலங்கா அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மீண்டும் நினைவுபடுத்துவதுடன், உதவிகளையும் வழங்கும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
2
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அறிக்கையை முன்வைத்தார்.
அதையடுத்து. அந்த அறிக்கை மீது விவாதம் இடம்பெற்றது. இதன்போது சிறிலங்காவுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், ஹர்ஷ டி சில்வா வெளிநாட்டு நீதிபதிகள் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை பற்றி எதையும் கூறவில்லை.
“எமது சமூகத்தின் எல்லாத் தரப்பினருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி புதிய பொறிமுறைகள் உருவாக்கப்படும். அனைத்துலக நிபுணத்துவத்தையும், உதவியையும் நாம் கோருவோம். அந்தப் பொறுப்பை எல்லா நாடுகளும் நிறைவேற்ற முடியும்.” என்று மாத்திரம் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையை சிறிலங்கா பகிரங்கமாக நிராகரிக்காத போதிலும், வெளிநாட்டு நிபுணத்துவமும், உதவியும் மாத்திரம் கோரப்படும் என்று கூறி நழுவியுள்ளது.
அதேவேளை, அறிக்கை மீதான விவாதத்தின் முடிவில் பதிலுரை ஆற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய பரிந்துரை தொடர்பாக கூறும் போது, கலப்பு நீதிமன்றம் என்ற பதத்தையும் பயன்படுத்தியிருந்தார்.

பலவகையிலும் இலங்கை நெருக்கடுக்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கிறது இதற்க்கான ஒரே காரணம் புத்த பிக்குகள் அரசின் நடவடிக்கைகளில் கலந்து கொவதும் அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எத்தநிப்பதும்தான்.இதனை அரசு இன்னும் உணராமல் எதிர்கால தேர்தலுக்காக வாக்கு வங்கிகளை பெரும் முயற்சியாக இன வாதிகளை அரச மாளிகைகளில் தொட்டில் கட்டி தாளட்டுவதுதான் காரணம்.பொதுவாக இந்த அரசாங்கள் அடைந்த 1980 ம் ஆண்டுக்கு முந்திய உலக சிந்தனையில் உறங்கிக்கொண்டு இருப்பதோடு உலக நாடுகளும் அந்த புத்தியில் இருப்பதாக சிந்திக்கும் கொள்கையில்தான் இலங்கை அரசு யோசித்து இந்த இனவாதிகளின் கையிற்றை விழுங்கி உலக நாட்டுக்கு முன் தலை குனியும் சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றது.
ReplyDelete