லண்டன் தாக்குதல் சூத்திரதாரி, பிரிட்டனில் பிறந்த குற்றங்களுடன் தொடர்புடைய காலித் மசூத்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார்
தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்.
.மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52.
முதலில், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது காரை மோதிய மசூத், அதன் பிறகு நாடாளுமன்ற வளாக மைதானத்துக்குள் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கத்தியுடன் இருந்தார். போலீசார் அவரைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னதாக, காவலர் பால்மரை அவர் கத்தியால் குத்தினார்.
.மசூத்தின் தாக்குதல் நோக்கம் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை என பெருநகர போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், போலீசாருக்கு அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கின்றன. உடலில் காயம் ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் நடத்துதல், ஆபத்து விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை வைத்திருத்தல், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் அறியப்பட்டவர்.
குற்றச் செயல்களுக்காக, முதன் முதலில் 1983-ஆம் ஆண்டு அவர் தண்டிக்கப்பட்டார். கடைசியாக, 2003-ஆம் ஆண்டு கத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். ஆனால், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படவில்லை.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், பர்மிங்காம் கிளையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக என்டர்பிரைஸ் என்ற வாடகைக் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தான் ஓர் ஆசிரியர் என்ற அடையாளம் சொல்லி, ஹூண்டாய் எஸ்யுவி ரக காரை மசூத் வாடகைக்கு அமர்த்தியதாக பிபிசி அறிந்துள்ளது.

Post a Comment