Header Ads



புத்தகம் கொண்டுவராத மாணவர்களுக்கு, பெற்றோருக்குமுன் முழந்தாளிட வைத்து தண்டனை

ஹொரணை கல்வி வலயத்தில் உயர்தரம் வரையில் இயங்கிவரும் தமிழ் மகா வித்தியாலயம் ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்றுவரும் மாணவர்களில் நான்கு மாணவர்களை முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சித்திரப் பாடத்துக்கான வரைதல் புத்தகம் கொண்டுவராத காரணத்தால் சித்திரப் பாடம் கற்பித்துவரும் சிங்கள ஆசிரியை ஒருவரினால், பெற்றோர் சிலர் வெளியில் நின்று பார்த்திருக்கவே இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெற்றோர் மிகுந்த அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், அவ்வேளையில் பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரும் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனை வழங்குவது குற்றமாகும் என்பதுடன் மனித உரிமை மீறலாகும் என குறித்த ஆசிரியைக்கு எடுத்துக் கூறியபோது ஆசிரியை அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தாம் எடுத்த நடவடிக்கை சரியென வாதிட்டுள்ளார்.

தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம், சித்திரம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் சிங்கள மொழி மூலமே மாணவர்களுக்கு விளக்கமளிப்பதால் தமிழ் மாணவர்கள் மொழி புரியாது பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது அலுவலகம் மற்றும் நூலகத்திலும்கூட தமிழர் அல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் தமிழ் ஆசிரியர்களையும் தமிழ் ஊழியர்களையும் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர், மாணவர், நலன்விரும்பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.