Header Ads



கப்பலிலிருந்த இலங்கையர்கள், எவ்வாறு விடுவிக்கப்பட்டனர்..?

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்டு, அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் எட்டு பேரையும் எவ்வாறு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , வெளிவிவகார பிரதி அமைச்சராகிய நான், வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க எம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், குறித்த கப்பல் நிறுவனத்தின் தலைவருடன் பேச்சு நடத்த அங்குள்ள எமது நாட்டு பிரதிநிதிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் சோமாலிய அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினோம்.

அத்துடன், கப்பல்களின் பாதுகாப்பு குறித்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

கடத்தப்பட்ட கப்பலை சுற்றி வளைத்திருந்த புன்டலாண்ட் நாட்டின் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினோம்.

கப்பலில் உள்ளவர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான நிலையில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பில் புன்டலாண்ட் நாட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை நான் வழங்கினேன்.

இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமாக இலங்கையர் அனைவரினதும் உயிரை காப்பாற்ற முடிந்ததையிட்டு மனம் மகிழ்வதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.