ஜெனீவாவில் மங்கள, கூறியது என்ன..?
இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென்பதோடு, புதிய அரசியலமைப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இவ்வாண்டுக்குள் எட்டுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று உறுதி வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை (27) ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹசைனின் உரையுடன் ஆரம்பமானது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுடள்ளன.
இந்நிலையில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், இலங்கை அரசானது சுதந்திரமடைந்த கடந்த 69 ஆண்டுகாலமாக நிகழ்ந்த இரத்தம் சிந்திய போராட்ட சூழல் மற்றும் பதற்ற சூழலை எதிர் கொண்டதால், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை எட்ட முடியாமல் போனதை தாம் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காரணங்களினாலேயே இலங்கை அரசாங்கமானது, விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இவற்றை எதிர்கொள்ளவே, காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்கான தனியான ஆணைக்குழு, தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டு குழு மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் உருவாக்கல் போன்ற செயற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களுக்குள் செயற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தனியார் தொண்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும், இராணுவத்திற்கும் எதிரான குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சர்வதேச நீதிபதிகளின் ஊடான விசாரணை பொறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது சார்பில் யுத்தக்குற்றங்கள் குறித்த எவ்வித குறிப்புகளையும் வெளியிடாத நிலையில், குறித்த விவகாரம் இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒன்றித்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில், சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பதனால் ஜனாதிபதிய மைத்திரிபால சிறிசேன, குறித்த சர்வதேச நீதிபதிகள் பொறிமுறையை நிராகரித்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.
சுமுகமான தீர்மானம் ஒன்றை ஏற்படுத்த பிரிட்டனின் அனுசரனைகள் கிடைத்திருந்தாலும், இலங்கையின் போர்க்குற்ற பொறுப்பு கூறலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

Post a Comment