Header Ads



மன்னித்துவிட்டோம்....!


சுவர்க்கத்திலிருந்து இறக்கிய
இரும்பு கொண்டு
செய்த சன்னங்கள் 
உடலை ஊடறுத்து
சல்லடைகளாக சிதறச்செய்து
இன்னுயிர்களை காவு கொண்ட போது....

சிதறிய மாமிசத்துண்டங்களிலிருந்து
சொட்டுக்களாக 
உதிரும் உதிரங்கள் 
பார் நனைத்த போது.....

அரிதட்டு - நீங்கள் எல்லாம் 
கேள்விப்படிருப்பீர்கள்
பாவித்துமிருப்பீரகள்!
விலைமதியில்லா உயிர் சுமந்த 
எங்கள் உடல்கள் 
சன்னங்களுக்கு மட்டும் 
அரிதட்டாகிய போது....

பாலைநிலத்தில் 
பசியாறுதல் மணற்கயிறாகி
மலவாயில் தேவையற்றதான போது...
சுட்டெரித்து செல்லும் சிறுநீர் 
கற்களை வெளித்தள்ளும் போது....
தோல் வியர்வையிழந்து 
படிமங்களை சுமந்து
மரப்பட்டடைகளான போது....

குளிர் சுள்ளென குத்தி 
உதிரம் உறை நிலையை அடைந்த போது...
உறக்கம் தொலைந்து 
தொலைதூரமான போது....
உறவுகளின் ஊடல்கள்
ஊமையான போது.....

இழக்க மறுக்கும் 
நாங்கள் கொண்ட
நம்பிக்கையை 
உயிர்நாடியாக பிடித்துக்கொண்டு
பரதேசிகளாய் அலைந்த போது .....

எங்கள் சகோதரங்களே...
நீங்கள் உண்டு பருகி
நிம்மதியான உறக்கத்துடன்
களி கொண்டு 
பாரிலே உலாவுகையில்
உங்கள் கடைக்கண் பார்வையேனும்
எங்களை நோட்டமிடாததேனோ?

எம்மவல நிலை
உங்களை செய்தியாக 
அடையும் போது 
காக்கைக்கும் பருந்துக்கும் 
உணவாக்கப்பட்டிருப்போம்!
ஆகையால் 
இறுதி மூச்சுக்கு முன்னராக
உங்களை நாங்கள் 
மன்னித்துவிட்டோம்!
ஏனெனில் - நீங்கள் 
எங்கள் சகோதரங்கள்!!

--Dr AC. அப்துல் ரஷாக் ---

No comments

Powered by Blogger.