Header Ads



13வது திருத்தத்தை முழுமையாக, நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ரணில்

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் உள்வாங்கி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தின் மூலம் நாட்டை காட்டிக் கொடுப்பதாகக் கூறும் வாதத்தை அரசு முற்றாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முதலில் நாமனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய விடயம். எந்தவொரு மாகாணத்திலும் பிரிவினைவாதம் குறித்து பேசுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. அதனை முற்றாக தடைசெய்ய வேண்டியது மிக முக்கியமானதெனவும் பிரதமர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கொட்டிகாவத்த ஸ்ரீ நாகருக்காராம விகாரையின் இரண்டு மாடிக்கட்டிடத்தையும், சங்க வாசஸ்தலத்தையும் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்வைபவத்தில் பிரதமர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

அரசியல் ரீதியில் நாம் ஒன்றுபட்டுள்ளோம். நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல இது முக்கியமானதாகும். சிலர் பிரிவினைவாதத்தில் நின்று செயற்படுகின்றனர்.

 அவர்கள் சிங்கள, தமிழ், பிரிவினையை முன் வைக்கின்றனர். ஆனால் நாம் கிராமப்புறங்களுக்குச் சென்று பார்க்கும் போது அங்கு காணப்படுவது ஐ. தே. க. சு. க. பிளவையே ஆகும். வெளிநாடுகளில் இதனை எவ்வாறு கையாளுகின்றதென்பதை ஆராய்ந்து பார்த்து நாம் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அரசியல் ரீதியில் நாமனைவரும் இலங்கையர்கள் என்ற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் அதேபோன்று அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளும், பல்வேறு அமைப்புகளும் ஒன்றுபட்டு ஒரு அறிக்கையை எமக்கு அனுப்பிவைத்திருந்தனர். அந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்ட போதிலும் அதில் அடங்கியுள்ள யோசனைகளை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவை தொடர்பில் ஆராயத்தயாராக இருக்கின்றோம். நாம் அரசியலமைப்பு சபையாகக் கூடி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு செயற்பாட்டுக்குழுவொன்றை அமைத்திருக்கின்றோம்.

அந்தக் குழுவின் மூலம் ஆறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 6 உபகுழுக்களை நியமித்துள்ளோம். அவற்றின் யோசனைகளும் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது. சில யோசனைகள் முரண்பாடானவையாகும். சகலவிடயங்கள் தொடர்பிலும் நாட்டு மக்களுடன் கலந்துரையாடுவோம் அதற்கான ஆரம்பப்பிணிகளை தொடங்கியுள்ளோம். செயற்பாட்டுக் குழு முதற்கட்டமாக கொள்கைத் திட்டத்தையும், அடிப்படை தொடர்பான ஆரம்ப அறிக்கையையும் தயாரிக்க விருக்கின்றோம்.

இறுதி அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விசாரித்த பின்னர் எட்டப்படக் கூடிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த அரசியலமைப்புச்சட்ட மூலம் தயாரிக்கப்படும். இன்னமும் நாம் பெருங்கடலுக்குள் பிரவேசிக்கவில்லை., ஒருவருட காலமாக கலந்துரையாடி வருகின்றோம். 40 வருடங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடி தொட்ர்பில் குறைந்தபட்சம் ஒரு வருடகாலமாவது பேச வேண்டியுள்ளது.

சிலர் இதனை புத்த தர்மத்துக்கு இருக்கும் முன்னுரிமையை ஒழிக்கும் முயற்சியாக பார்க்கின்றனர். எந்த விதத்திலும் அவ்வாறாக இடம்பெற மாட்டாது. அனைத்துக் கட்சிகளும் புத்த தர்மத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என்பதில் உறுதியாகவே இருக்கின்றன.

சிறுபான்மையினர் மற்றும் ஏனைய மதங்களுக்கு குறைபாடுகள் காணப்படுமானால் அவற்றை திருத்தி உரிய இடத்தைப் பெற்றுக் கொ்டுப்போம். அனைத்து இன மக்களுக்கும் அவரவர் மத வழிபாடுகளுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்து நாட்டின் பிரதான மதத்துக்கு முன்னுரிமையளிப்பதே அரசின் நிலைப்பாடாகும்.

அத்துடன் தேர்தல்முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறை, அமைச்சரவை முறை என்பன தொடர்பிலும் பேசிவருகின்றோம். சில விடயங்களில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். சிலர் இதனை சமஷ்டிமுறையெனக் கூற முற்பட்டாலும் எமக்கு்த் தேவைப்படுவது அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஆட்சி செய்வதாகும். இன்றைய முக்கியபிரச்சினை அதிகாரப் பகிர்வு தொடர்பானதாகும்.

No comments

Powered by Blogger.