Header Ads



உலகத்தையே உளவு பார்த்தவர்களை, உளவு பார்த்தவர் (ஒரு உளவு அமைப்பின் கதை)

எல்லா நாடுகளிலுமே ராணுவம், காவல் துறைக்கு அடுத்தபடியாக முன்னிறுத்தப்படுவது உளவுத் துறைதான். வேறு நாட்டுக்குப் போய் உளவுபார்த்து மாட்டிக்கொண்டாலும், அவ்வளவு சீக்கிரத்தில் உளவாளிகளை அனுப்பிய நாடு அதை ஒப்புக்கொள்ளாது. அதுதெரிந்தும் நாட்டின் பாதுகாப்புக்காக வெவ்வேறு பெயர்களில், அடையாளங்களில், பல்வேறு நாடுகளில் உளவு வேலையில் ஏராளமானோர் ஈடுபடத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு உளவு அமைப்பை பற்றிய கதை தான் இது...,     
ரஷ்யாவில் நடந்து வந்த ஜார் மன்னராட்சியில், புரட்சியாளர்களையும், அரசரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவர்களையும் ஒடுக்கவும், அத்தகையவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் "ஒக்ரானா" என்ற ரகசிய உளவு அமைப்பு செயல்பட்டு வந்தது. மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதே இவர்களது முக்கியப் பணியாக இருந்தாலும், மன்னராட்சிக்கு எதிராக செயல்படும் புரட்சிக் குழுக்களை கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர். மன்னராட்சிக்கு எதிராக புரட்சி மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலம். எந்த நேரத்திலும் புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், செயல் திட்டங்களில் திறமை குறைந்திருந்ததாலும் ஒக்ரா உளவு அமைப்பினால் பெரிய அளவில் புரட்சிப் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும், புரட்சியாளர்களை ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருக்க இந்த அமைப்பு உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு லெனின் தலைமையிலான கம்யூனிச புரட்சியாளர்களின் போல்ஷ்விக் அரசு பொறுப்பேற்றது. அதன் பின்னர் ஒக்ரா அமைப்புக்கு அந்நாட்டில் வேலை இருக்காது என்றுதான் பலரும் நினைத்தனர். மன்னராட்சியை விட, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்போது நாட்டில் திருட்டு, குற்றங்கள், புரட்சிகள் போன்றவை நடக்காது என நினைத்தனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். ஆனால் புதிய அரசு அமைந்து, லெனின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆறு வாரங்களில், "செகா" என்ற ரஷ்யப் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டதுதான் ஆச்சரியம்.

அர்னால்ட் டாய்ச்

ஜார் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, கம்யூனிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான அரசு அமைந்து விட்டாலும், இந்த அரசைத் தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள இதுபோன்ற அமைப்புகள் தற்காலிகமாக தேவை என நினைத்தார் லெனின்.  இப்படி தற்காலிக தேவைக்கென 1917, டிசம்பர் 20-ல் தொடங்கப்பட்ட "செகா" பின்னாளில் ரஷ்யாவின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் ஆயுதமாகவும் மாறியது. செகாவில் பணியாற்றிவர்கள் தங்களை "செக்கிஸ்டுகள்" என அழைப்பதில் பெருமை கொண்டனர். செகாவின் உளவாளிகள் ஏறத்தாழ உலகின் எல்லா நாடுகளிலும் பரவியிருந்தனர். சோவியத் ரஷ்யாவிற்குத் தேவையான அல்லது சம்பந்தமே இல்லாத தகவல்கள் என எல்லா தகவல்களும் உடனுக்குடனாக, மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டது. உலகின் பெரிய நாடுகள் அவ்வளவாக இதுபோன்ற உளவு வேலைகளில் கவனம் செலுத்தாத நிலையில், தன்னுடைய ஊழியர்களை அங்கே அனுப்பி வைப்பது, பெரிய காரியமாக இல்லை. பெரும்பாலும் நல்ல திறமையான, அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே இதுபோன்ற வெளிநாட்டுப் உளவுப் பணிகளுக்கு அனுப்பபட்டனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் மாற்றங்கள் இருந்த அதே நேரத்தில் GPU, OGPU, GUGB, NKGB, MGB, MVD என அதன் நேம் போர்டுகளும் மாறிக் கொண்டேயிருந்தன. பெயர்கள் தான் மாறியதே தவிர, அதன் செயல்பாடுகள் ஒன்றாகவே இருந்தன. இதில் அதிக ஆண்டுகள் பெயரையும், புகழையும் தக்க வைத்துக்கொண்டது 1954-ல் தொடங்கப்பட்ட KGB தான். இது, பின்னாளில் சோவியத் பாதுகாப்பு மற்றும் உளவுச்சேவை நிறுவனமாக மாற்றம் கண்டது.

1917-ல் தொடங்கப்பட்டபோது, செகாவின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே. இந்த எண்ணிக்கை 1973-ல் 4.9 லட்சமாகவும், 1986-ல் 7 லட்சமாகவும் அதிகரித்தது. தகவல் சேகரிப்புப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, எதிர் உளவுப்பிரிவு, ஊழல் தடுப்புப் பிரிவு. என தன்னுடைய செயல்பாடுகளை தெளிவாக வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியது செகா. இந்த திட்டமிடல்கள்தான் கே.ஜி.பி-யையும் உலகின் முன்னணி உளவு நிறுவனமாக முன்னேற்றியது எனலாம். மேற்கத்திய நாடுகள் சூழ்ச்சிசெய்து எப்போது வேண்டுமானாலும் சோவியத் ரஷ்யாவை வீழ்த்தி விட வாய்ப்பிருக்கிறது என்ற போல்ஷ்விக் தலைவர்களின் பயம்தான் செகா போன்ற ஒரு உளவு நிறுவனம் உயிர்ப்போடு இருக்கக் காரணம். இதனால் பல்வேறு காலக் கட்டங்களில் மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் உண்மை.

உதாரணமாக, ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், "இருவர் சாலையில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கும்போது செக்கிஸ்டுகள், அவர்களை வழிமறித்து தனித்தனியே கூட்டிச் செல்வார்களாம். இருவரிடமும் ஒரே கேள்வி, "கடைசியாக என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்!?" இதற்கு இருவரும் ஒரே பதிலைச் சொன்னால் தப்பித்தார்கள். கொஞ்சம் மாற்றிச்சொன்னாலோ அல்லது பயத்தில் யோசித்தாலோ புரட்சி செய்யப் பார்த்தார்கள் எனச்சொல்லி சிறையில் அடைத்தார்கள் "

இப்படி செக்கிஸ்டுகளால் உள்நாட்டில் நிறைய பிரச்சினைகள் வந்தாலும், பிற நாடுகளின் கே.ஜி.பி ஊழியர்கள், தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உளவுச் செய்திகளை அனுப்பி வந்தார்கள். அவற்றில் முக்கியமானது  இங்கிலாந்தில் உளவாளியாகச் செயல்பட்ட அர்னால்ட் டாய்ச் என்ற செக்கிஸ்டின் "கேம்பிரிட்ஜ் ஃபைவ்" (Cambridge five) திட்டம். 

ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் எளிமையான ஒரு திட்டத்தை தீட்டினார் அர்னால்ட் டாய்ச்.ஏற்கெனவே, அரசுத் துறைகளில் வேலை பார்ப்பவர்களை உளவாளிகளாக மாற்றி தகவல் பெறுவதையே பெரும்பாலும் எல்லா உளவு நிறுவனங்களும் செய்துவந்த நிலையில், புதிதாக அரசுத் துறைகளுக்கு வேலையில் சேரப்போகும் மாணவர்களின் மீது தன் கவனத்தை திருப்பினார். அப்படிக் கிடைத்த ஒருவர்தான் கிம் ஃபில்பி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான கிம் ஃபில்பிக்கு, ஆரம்பத்திலிருந்தே அரசின் மீதும் குடும்பத்தின் மீதும் வெறுப்பு இருந்தது. அவரிடம் பேசினார் டாய்ச். திட்டத்திற்கு ஒத்துழைப்பதாக கூறி, இணைந்து கொண்டார் கிம் ஃபில்பி . படிப்பை முடித்து அரசுத் துறைகளில் பணியாற்றத் தொடங்கிய ஃபில்பி போலவே இன்னும் நான்கு மாணவர்கள் இதில் இணைந்து கொண்டு செயல்படத் தொடங்கினர். பிரிட்டிஷ் அரசுத்துறை சார்ந்த தகவல்கள், மாஸ்கோவிற்கு பறந்தன. இதில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்தது. பிரிட்டிஷ் உளவுத்துறையில் கிம் ஃபில்பிக்கு வேலை கிடைத்ததுதான். ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் தகவல்களைத் திருடி அனுப்பியதில் மாட்டிக்கொண்டார். வழக்கு தொடுக்கப்பட்டது, ஆனால் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடாததால் அதிகபட்சமாக அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு. மாஸ்கோ சென்றவருக்கு, கே.ஜி.பி-யில் பணி காத்துக்கொண்டிருந்தது.

செக்கிஸ்டுகளின் இன்னொரு சாதனை, அமெரிக்காவின் யுரேனியம் - புளுட்டோனியம் அணுகுண்டு சோதனையின் அத்தனை விவரங்களையும் சேகரித்து அனுப்பியதுதான். இதனால் அடுத்த நான்கே வருடங்களில் ரஷ்யாவும் அணுகுண்டை வெடிக்கச் செய்து, தன் பலத்தை நிரூபிக்க முடிந்தது. அவ்வளவு ஏன்? அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வந்த சமயத்தில் அமெரிக்காவின் முக்கியப் பாதுகாப்பு அமைப்புகளான CIA , FBI-யின் உயர்மட்ட பதவிகளில் கூட ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியிருந்ததாக சொல்லப்படுகிறது. 

இப்படி செம கில்லாடிகளாக விளங்கிய செக்கிஸ்டுகளின் உளவு வேலைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்தது மிட்ரோகின் ஆவணங்கள். செகாவின் உளவு வேலை குறித்த ஆவணங்களை பாதுகாக்கும் பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார் மிட்ரோகின். அதில் இருந்த அத்தனை தகவல்களும் ஒரு நாட்டின் அதிகாரத்தையே அசைத்துப் பார்க்கக் கூடியவை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை மிட்ரோகின். ஆவணங்களை மொத்தமாக எடுத்துச் சென்று ஜெராக்ஸ் போட்டுக் கொண்டு வந்துவிட முடியாது. ஆவணங்களில் இருந்த தகவல்களை சிறு சிறு குறிப்புகளாக எழுதி, அதை தன் காலுறையில் வைத்துக் கடத்தி கொண்டிருந்தார். அவர் மேல் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இப்படி மொத்தம் 12 வருடங்கள் அவர் இந்த வேலையை செய்ததாகச் சொல்லப்பட்டது. இந்தக் குறிப்புகள் அனைத்தும் சோவியத் யூனியன் கலைந்த பிறகு "மிட்ரோகின் ஆவணங்கள்" என வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னர் வரை கே.ஜி.பி இயங்கி வந்தது. 1991 அக்டோபர் 24-ம் தேதி கே.ஜி.பி கலைக்கப்பட்டது. சுதந்திர ரஷ்யா உருவாக்கப்பட்ட பிறகும், இப்படியான உளவு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. 

No comments

Powered by Blogger.