Header Ads



'அல்லாஹு அக்பர்' என கோஷமிட்டபடி, துருக்கிய ரஷ்ய தூதுவரை, சுட்டுக்கொன்றவர் இவர்தான்


துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார்.

துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.

தாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் இருந்த ஒலிவாங்கியின் அருகே சூட் ஆடை அணிந்த இருவர் தாக்குதலில் காயமடைந்து தரையில் கிடப்பதை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பித்துள்ளன.

தாக்குதல் நடத்திய நபர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. மிக நெருக்கமான தூரத்தில் இருந்து ரஷ்ய தூதர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் ரஷ்ய தூதர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

"தீவிரவாதம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இன்னும் உறுதியுடன் எதிர்ப்போம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்றும், அவர் எப்போதும் மனதில் நிலைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸன், பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.

எட்டு குண்டுகள் பாய்ந்தன

`துருக்கியர் பார்வையில் ரஷ்யா' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட நேரத்தில் ரஷ்ய தூதர் சுடப்பட்டார் என ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவைப் பார்த்தபோது, கார்லோஃப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது எட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், தாக்குதல் நடத்திய நபரைப் பதிவு செய்துள்ள கேமராவில், சூட் மற்றும் டையுடன் மிடுக்கான உடை அணிந்த நபர், கைத் துப்பாக்கியை சுழற்றியவாறு கூச்சலிட்டுக் கொண்டே வருவது காட்டப்பட்டுள்ளது.

"அலெப்போவைப் பற்றி மறந்துவிடாதீர்கள். சிரியாவைப் பற்றி மறந்துவிடாதீர்கள் " என்று கூச்சலிட்ட அவர், "அல்லாஹு அக்பர்" என்றும் கோஷமிட்டார்.

அலெப்போ சூழ்நிலை குறித்து சமீப நாட்களில் போராட்டங்கள் நடந்தாலும், போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக அரசியல் ரீதியாக துருக்கி மற்றும் ரஷ்யா இடையே, அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்புக்கள் இருந்தன என்று துருக்கி பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, துருக்கி மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே ரஷ்யாவில் செவ்வாய்க்கிழமையன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சிரியாவின் எதிர்காலம் தொடர்பான அரசியல் போராட்டம், மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் அளவுக்கு பெரிதாகிவிட்டதை இன்றைய சம்பவம் காட்டுவதாக நமது செய்தியாளர் கூறுகிறார்.

அனுபவம் வாய்ந்த தூதரான கார்லோஃப், 62 வயதானவர். 1980-களின் பெரும்பாலான காலத்தை, வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதராகப் பணியாற்றினார்.

1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார். 2001-ல் வடகொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார்.

2013-ல் துருக்கிக்கான தூதராக நியமிக்கப்பட்ட அவர், ரஷ்ய ஜெட் விமானத்தை சிரியா எல்லையில் துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதல்களைக் கையாள வேண்டிய முக்கியப் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.