Header Ads



குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்


குவைத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்கள். அரபு வளைகுடா நாடான குவைத்தில் சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

ஐம்பது இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 300 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 14 பேர் மட்டுமே பெண்கள். முழுமையான ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், முக்கிய அதிகாரங்கள் அல்-ஸபா அரச குடும்பத்திடம் இருக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. குவைத் நாட்டில் கடந்த 250 ஆண்டுகளாக அந்தக் குடும்பம்தான் ஆட்சி புரிந்து வருகிறது.

ஆனால் வளைகுடா நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறையை அறிமுகம் செய்த முதல் நாடு குவைத் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஜனநாயக முறை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.

பெட்ரோலிய வளம் நிறைந்த அந்த நாட்டில், பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விவகாரங்களிலும் ஏராளமான சலுகைகளை குடிமக்களுக்கு வழங்கி வருகிறது குவைத் அரசு. ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து, பெட்ரோலியம் பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைக் குறைப்பதாக அரசர் அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பெட்ரோல் பொருள்களின் விலை அதிகரித்தது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 7 சதவீத அளவு குவைத்தில் உள்ளது. தினசரி 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அந்த நாடு நிலத்தடியிலிருந்து எடுத்து வருகிறது. குவைத்திடம் சுமார் 60 ஆயிரம் கோடி டாலர் (சுமார் ரூ. 40 லட்சம் கோடி) ரொக்கம் கையிருப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.

தற்போது குவைத்தில் வாழும் சுமார் 44 லட்சம் பேரில் 70 சதவீதத்தினர் வெளிநாட்டவர். குவைத்தியர்களின் எண்ணிக்கை 12.3 லட்சம் பேர். அதில் சுமார் 4.83 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது.

No comments

Powered by Blogger.