Header Ads



ஜனவரி தொடக்கம், மார்ச் வரை 620 விமானப் பயணங்கள் ரத்து


கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், சிறிலங்கன் விமான சேவையின் 620 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம், மூன்று மாதங்களுக்கு பகல் நேர விமான சேவைகள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இதனால்,  மொத்தமாக 200 விமானப் பயணங்களை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்கன் விமான சேவை முன்னர் கூறியிருந்தது.

ஆனால், மாதம் ஒன்றுக்கே 200 விமான சேவைகள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் நாளொன்றுக்கு 7 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதால் மூன்று மாதங்களிலும் மொத்தமாக 620 விமான சேவைகளை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மாலே, திருச்சி, மதுரை, போன்ற குறுந்தூரப் பயணங்களே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

இந்த விமானப் பயணங்களை ரத்துச் செய்வதால் சிறிலங்கன் விமான சேவை பெரும் வருமான இழப்பை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று ஏற்பாடாக மத்தல விமான நிலையத்தைப் பகல்நேரப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதில் சிறிலங்கன் விமான சேவை ஆர்வம் காட்டவில்லை.

ரத்துச் செய்யப்படும் பெரும்பாலான விமானப் பயணங்கள் 4 மணிநேரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும், இந்த நான்கு மணிநேர விமானப் பயணங்களுக்காக, மத்தலவுக்கு நான்கு மணிநேரப் பயணத்தை மேற்கொள்ள பயணிகள் தயாராக இருக்கமாட்டார்கள் என்றும் சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.