மைத்திரி அஞ்சினாரா..? ரணில் அச்சுறுத்தினாரா..??
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமன விடயத்தில் தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு என்ற அடிப்படையில் கொழும்பின் செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஆளுநராக தமது சிரேஸ்ட ஆலோசகர் ச்சரித்த ரத்வத்தை நியமிக்கவேண்டும் என்று கோருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் உதவி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை புதிய ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இன்னும் முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று மத்திய வங்கிக்கு விஜயம் செய்த, ஜனாதிபதி அங்கு நந்தலாலின் பெயரை புதிய ஆளுநர் என்ற அடிப்படையில் குறிப்பிடவிருந்தார்.
எனினும் உடனடியாக அங்கு விரைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் ஆகியோர் நந்தலாலின் பெயரை ஜனாதிபதி குறிப்பிடாமல் தடுத்துள்ளனர்.
புதன்கிழமையன்று காலையில் பதுளையில் வைத்து இன்னும் சில மணித்தியாலங்களில் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
எனினும் இரண்டு நாட்களாகியும் இன்னும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
அரசியலமைப்பை பொறுத்தவரையில் ஜனாதிபதியினால் யாரையும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கமுடியும். அவ்வாறு நியமித்தால், அரசாங்கத்துக்குள் பாரிய நெருக்கடி நிலை உருவாகலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நந்தலாலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தால் தாம் அரசாங்கத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக பிரதமர் அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பிரதமரின் தெரிவான ச்சரித்த ரத்வத்தை நாளை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment