"ஒரு இனத்தின் இரத்தம் என்று, எந்த இரத்தமும் இல்லை"
போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்து உள்ளார்.
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காங்கேசன்துறை புகையிரத நிலையம் அருகில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய காணிகளை உங்களுக்கு கொடுக்க சொல்லி இருக்கின்றார்கள்.அவற்றை நடைமுறை படுத்த நாங்கள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உள்ளோம்.
நீங்கள் இந்த பூமிக்கு சொந்தகாரர் இலங்கை உங்கள் சொந்த பூமி நீங்கள் பிறந்த வளர்ந்த பூமி அதனை கட்டாயம் உங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல சமாதானம் நிலவும்.
இன மத குல பேதமின்றி ஒரு தாயின் பிள்ளைகள் மாதிரி நாங்கள் இருக்க வேண்டும் இலங்கை தாய்க்கு நாங்கள் பாரமில்லை. நான் சிறுவயதில் ஒரு பாட்டு படித்தேன் ",மண்ணுக்கு மரம் பாரமா , மரத்திற்கு இலை பாரமா , குலைக்கு காய் பாரமா , தாய்க்கு பிள்ளை பாரமா " என்று ஒரு பாடல் அதேபோன்று இலங்கை தாய்க்கு தமிழ் மக்கள் பாரமில்லை.
நீங்களும் நாங்களும் என எல்லோரும் சேர்ந்து நல்லதை செய்ய வேண்டும் அதற்கு நல்ல சிந்தனை வேண்டும். நல்ல சிந்தனை நெஞ்சில் இருந்தால் எந்நேரமும் நல்லதையே செய்வோம்.
சிங்கள இரத்தம் என்று சொல்லும் குழு உண்டு உங்களுக்கு சொல்ல முடியும் தமிழ் இரத்தம் என்று , வேறு நபர்கள் தங்கள் இனத்தை சொல்லி அந்த இனத்தின் இரத்தம் என்று அந்த மாதிரி எந்த இரத்தமும் இல்லை. அனைவருக்கும் ஒரே இரத்தம் தான் உண்டு.
உங்களுக்கு வைத்திய சாலையில் இரத்தம் தேவைப்படும் போது எங்களுக்கு சிங்கள இரத்தம் வேண்டாம் தமிழ் இரத்தம் வேண்டும் என்றோ அல்லது தமிழ் இரத்தம் வேண்டாம் சிங்கள இரத்தம் தான் வேண்டும் என்று எவரேனும் சொல்வது உண்டா ?
இலங்கை மன்னர்கள் இந்தியாவில் இருந்தே பெண் எடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். அப்ப எப்படி தனியே சிங்கள இரத்தம் வரும். தமிழ் சிங்கள இரத்தம் கலந்து இருக்கின்றது.
நீங்கள் விகாரைக்கு சென்றால் அங்கு இந்துக் கடவுள்கள் இருக்கின்றார்கள். அந்த தெய்வங்களை கும்பிடுறவர்கள் சண்டை பிடிக்கின்றார்கள். அங்கே தெய்வங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறது.
எனவே நாங்கள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த நாட்டிற்கு நல்லதை செய்ய வேண்டும் என வேண்டி நிற்கிறேன். எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகின்றேன். என தெரிவித்தார்.

Post a Comment