Header Ads



கிரிக்கெட்டில் இது புதுசு, நடுவரின் முடிவுக்கு இலங்கை எதிர்ப்பு


நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் உள்ள பால்கனியில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் வீரர்கள் இப்படி எதிர்ப்பு காட்டியது இதுதான் முதன் முறையாகும்.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்னும், இலங்கை அணி 288 ரன்னும் எடுத்தன. 4வது நாளில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 58 ரன்னில் இருக்கையில் நுவான் பிரதீப் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஆனால் நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியா) அதனை நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீபிளேயில் பந்து வீசுகையில் நுவான் பிரதீப்பின் கால் கிரீசை தாண்டவில்லை என்பது தெரிந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அணியின் மானேஜர் செனநாயகே, பயிற்சியாளர் கிரகாம் போர்டு ஆகியோர் போட்டி நடுவரை அணுகி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதற்கிடையில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் உள்ள பால்கனியில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டனர். சுமார் 45 நிமிடம் தேசிய கொடி பறந்தது. மைதானத்துக்குள் தேசிய கொடியை அணி நிர்வாகம் பறக்க விடக்கூடாது. இது பற்றி அறிந்ததும் போட்டி அமைப்பு குழுவினர் இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியை அகற்றினர்.

362 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், குஷல் சில்வா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆட்டம் தொடங்கியது. குஷல் சில்வா 16 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்டு ஆனார். 24.2 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது.

No comments

Powered by Blogger.