Header Ads



ரமலானுக்குப் பின் மாபெரும் போராட்டம் - முக்தாதா அல்-சதர் மிரட்டல்

ரமலான் நோன்பு காலத்துக்குப் பிறகு, இராக் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் தொடங்கப்படும் என்று மதகுரு முக்தாதா அல்-சதர் மிரட்டல் விடுத்தார்.

அவருடைய ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

புனித ரமலான் நோன்புக் காலம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வேளையில் எந்தப் போராட்டத்தையும் நாம் நடத்தத் தேவையில்லை. ஊழல், முறைகேடு நிறைந்த அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

ரமலான் நோன்புக் காலம் முடிந்த பிறகு, நமது போராட்டம் மீண்டும் தொடங்கும்.

லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடத்தப்படும்.

அமைதியான முறையில் நடக்கும் போராட்டத்தின்போது அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிட்டால், நமது ஆதரவாளர்கள் அடங்கியிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன் என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராக்கில் ஊழல், பரவலான முறைகேடு ஆகியவற்றுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மதகுரு அல்-சதர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்ற வளாகப் பகுதியில் மாபெரும் பேரணிகள் நடத்தி, அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார்.

இரு முறை நாடாளுமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், கடந்த ஏப்ரலில், பலத்த பாதுகாப்பை மீறி, இராக் நாடாளுமன்றத்திலும் பிரதமர் அலுவலகத்திலும் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.