Header Ads



அடாவடி பிக்குகள் தொடர்பில், உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு மைத்திரிக்கு அழுத்தம்..?

பௌத்த பிக்குமார் இலங்கையின் முஸ்லிம் சமூகம் தொடர்பாக வெளியிடும் கருத்துக்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவைத் தளமாக கொண்ட உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை ஜனாதிபதியின் செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹியங்கனையில் வைத்து கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் கடும் பீதியில் இருப்பதாகவும், பௌத்த பிக்குகளால் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் கூறி இலங்கை முஸ்லிம் பேரவை, உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த அமைப்பு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு 57 நாடுகள் அங்கம் வகிக்கும் உலகில் இரண்டாவது பெரிய சர்வதேச அமைப்பாகும்.

எவ்வாறாயினும் உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்புக்கு இப்படியான கடிதம் ஒன்றை இலங்கை முஸ்லிம் பேரவை அனுப்பியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் சில சிங்கள இணையத்தளங்கள் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.