"விஜேசிங்ஹவும், நானும்"
-Mujeeb Ibrahim-
வீதிக்கு இறங்குகிறேன் பள்ளியை நோக்கிச்செல்ல, எதிர்ப்புறத்தில் விஜேசிங்ஹ இறுகிய முகத்துடனும், கொடிய பார்வையுடனும் இளக்கார கர்வத்துடன் என்னைக்கடந்து சென்றார்...
சம்பவத்தை இந்த இடத்தில் பின்னோக்கி சுற்றுகிறேன் ( rewind)....
அன்று அஸர்த்தொழுகையின் பின்னர் கல்விஹாரையில் அபாய மேகம் சூழ்வதாக தகவல் ஒன்று கிடைத்திருந்தது!
வீட்டுக்கு வந்து சற்று நேரத்தில் பல்கனியில் இருந்து பார்த்த போது அவர்கள் பள்ளியை நோக்கி நகர்வது தெரிந்தது....
செம்மஞ்சள் நிறத்திலான ஒரு அணி முன்னே போக வெளியூர்களில் இருந்து கூலிக்கு கூட்டிவரப்பட்ட ஒரு கூட்டம் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் சென்று கொண்டிருந்தது....
அவர்கள் பள்ளி வளாகத்துக்குள் கற்களை வீசினர்... பின்னர் பிரதான வீதிக்கு சென்று பள்ளிவாயலுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டமொன்றை செய்தனர்...!
இந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில்தான் நான் பள்ளியை நோக்கி அச்சத்துடன் நகர்ந்த போது விஜேசிங்ஹவை எதிர்கொள்ள நேர்ந்தது.
அவர் எனது வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி வசிப்பவர், கல்விஹாரையின் நிர்வாகிகளில் ஒருவர். தீவிர பெளத்தரான அவர் நாளாந்த பூஜைக்கான மலர்களை அவரது வீட்டுச்சுவர் ஓரம் நடப்பட்டிருக்கும் மரங்களில் பறிப்பவர்.
கடந்த பலவருடங்களாக அவரை எதிர்கொள்ளும் போதெல்லாம் என்னிடமிருந்து வெளிப்படுகிற புன்னகைகளுக்கு அவர் இறுக்கமான முகத்தை அல்லது என்னை கண்டு கொள்ளாத ஒரு புறக்கணிப்பை பதிலாக தருவதே வழமை.
அப்பச்சியின் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கு போகிற போது தொப்பி அணிந்து செல்லவும் எனது பாதையில் ஒரு அச்சமிருந்தது!
மிக அதிகாலை நீல இருளில் சுபஹு தொழுகைக்கு நடந்து போகிற போது விஜேசிங்ஹ எந்த வித சலனமும் இல்லாமல் பூஜைக்கு பூ பறித்து கொண்டிருப்பார்.
மிக நீண்ட நாட்களுக்கு முன் சொல்லப்பட்ட Good Morning ஒன்றிற்கு கூட எந்த வித பதிலும் அவரிடம் இல்லாத படியால் அப்படியே அவர் பாட்டில் விட்டுவிட்டேன்.
இன நல்லுறவிற்காக காலில் விழுந்தா கதற முடியும்?
அன்று எமது பள்ளிவாயல் முற்றுகையின் போது இந்த ஒட்டுமொத்த ஆத்திரத்தின் குறியீடுகளையும் முகத்தில் சுமந்தவராக அவர் என்னைக்கடந்து போனார்!
ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன வென்று நல்லாட்சி அமைந்ததாய் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்தி சாயும் ஒரு மாலைப்பொழுதில் மஃரிப் தொழுகைக்காக நடந்து போன போது எதிரே வந்த விஜேசிங்ஹ என்னைப்பார்த்து புன்னகைத்தார்.
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
அவர் தோல்வியடைந்து விட்டார்!
அவருக்கு என்னைப்பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழிகள் ஏதுமில்லை!
நானும் சிரித்து வைத்தேன்.
சிறிசேன ஜனாதிபதிக்காக மேடை ஏறி பிரச்சாரங்கள் செய்து குண்டடிபட்டதற்கு கிடைத்த பிரயோசனங்களில் ஒன்றாக விஜேசிங்ஹவின் புன்னகை தெரிந்தது.
அதன் பிறகு காணுகிற போதெல்லாம் புன்னகைகளால் நாமிருவரும் பேசிக்கொண்டோம்.
கடந்த நோன்பில் அவரது வீட்டுக்கு கஞ்சி கொண்டு கொடுத்தேன், அவர் வீட்டில் இல்லாத போதும் மறு நாள் கண்டு நன்றி சொன்னார்.
நோன்பு கஞ்சிக்கு பிறகு காண்கிற நேரங்களில் எல்லாம் ஓரிரு வார்த்தைகளை பரிமாறுகிற அளவுக்கு அவரது உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அதிகாலை வேளையில் சொல்லப்படுகிற வந்தனங்களுக்கு பதில் வந்தது!
இன்றும் கோழிக்கஞ்சியும், மீன் ரோல்களும் கொண்டு போய் கொடுத்தேன்.
நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடமாடமாட்டீர்கள் என்பதால் இவற்றை கொண்டுவந்தேன் என்றதும் அகமகிழ்ந்தார்.
என்னைத்தொட்டு அவரது ஆன்மீக மொழியில் துஆ செய்தார்.
எல்லாம் வல்ல இறைவன் அதனை எனக்காக கபூல் செய்யவும் கூடும்.
நல்லாட்சியும், கஞ்சியும் என்னையும் அவரையும் இணைத்திருக்கின்றன என்று எனக்குள் சொல்லிப்பார்த்தேன்.
நன்றாக இருந்தது.

Post a Comment