பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்புகொள்ளுங்கள்..!
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதிவுசெய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களின் சேதவிபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தைப் பணித்துள்ளார்.
வெள்ளத்தினால் பல குர்ஆன் மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் அவை தொடர்பான விபரங்களைத் திரட்டியே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பள்ளிவாசல்கள் மத்ரஸாக்கள் வெள்ளத்தினால் உடமைகளை இழந்துள்ளன.
கட்டிடங்கள் சிலவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹலீம் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீலை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வரும் விபரங்களை வழங்கினார்.
அமைச்சர் ஹலீமின் உத்தரவுக்கமைய திணைக்களம் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
விபரங்களைத் திரட்டி திணைக்களத்தின் அதிகாரிகளால் சேதவிபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதனால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிர்வாகிகள் விபரங்களை எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Post a Comment