இலங்கையில் பிரேசில் நாட்டின், பிரதான சூத்திரதாரியை பிடிக்கும் நடவடிக்கை தீவிரம்
பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிடையே 200 கோடி ரூபா பெறுமதியான 80 கிலோ கொக்கைன் போதைப்பொருளினை நாட்டுக்குள் கடத்திய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது.
அதன்படி இந்த கொக்கைன் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் பிரதான சந்தேக நபரான பிரேசில் பிரஜை தற்சமயம் இலங்கைக்குள் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர் தப்பி செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் ஊடாக தகவல்களைசேகரித்துள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தப்பிச் செல்வதை தடுக்கும் முகமாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள பிரேசில் தூதரகமும் போதைப் பொருள் தடுப்புப் பணியகம் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள நிலையில் அந்த தூதரகமும் பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இதனிடையே, கொழும்பில் உள்ள பிரபல சீனி இறக்குமதியாளர் ஒருவருக்கு என தெரிவித்து அனுப்பட்டிருந்த சீனி கொள்கலனுடன் கப்பலில் வந்த ஏனைய கொள்கலன்கள் தொடர்பிலும் பொலிஸார் விஷேட அவதானம் செலுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பணிப்பளர்கள் சபையின் அங்கத்தவரும் கொழும்பு வடக்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 5 ஆம் திகதி இந்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் 12 ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் 14 ஆம் திகதி அது குறித்த சுற்றிவலைப்பு இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார். நடவடிக்கை வலயத்தில் 5 கொள்கலன்களே பரிசோதிக்கப்பட்டதாகவும்இ இலங்கைக்கு வந்த வந்த கப்பலில் இருந்த ஏனைய கொள்கலன்களில் என்ன இருந்தன என்பது குறித்து சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண, இலங்கைக்குள் கொக்கைன் கொண்டுவரப்பட்ட நோக்கம் குறித்து இதில் வெளிப்படுத்தல்களை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட குறித்த கொக்கைன் போதைப் பொருள் தொகையானது மீள வெளிநாடொன்றுக்கு அனுப்பும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாக இதுவரையிலான விசாரணைகளில் சந்தேகிக்கத்தக்க தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை உறுதிப்படுத்த தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளதுடன் எந்த நாட்டுக்கு அனுப்புவதற்காக இலங்கை மத்தியதளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் அவ்விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
இதனை விட தற்போது கைதாகியுள்ள சீனி வர்த்தகர் கடந்த 20 வருட காலமாக சீனி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் 15 வருடங்களாக சீனி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அந்த 15 வருட கலத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் எதுவும் இடம்பெற்றுள்ளனவா எனவும் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் கொக்கைன் போதைப் பொருள் இருந்த கொள்கலனில் மேலதிகமாக இருந்த சீனி 26650 கிலோவும் அரச உடமையககப்ப்ட்டுள்ளது.

Post a Comment