Header Ads



பிரான்ஸில் பள்ளிவாசல்கள் மீது, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவன் கைது

பிரான்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறினார்.

இதுகுறித்து "பிரான்ஸ் இன்டர்' வானொலிக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடைபெறவிருக்கும் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அச்சுறுத்தல் இருப்பது உண்மையே.

இருந்தாலும், அதற்காக நாம் பயந்து, பின்வாங்கிவிடக் கூடாது.

எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், யூரோ 2016 கால்பந்துப் போட்டியை மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு ஜனவரி மாதமும், நவம்பர் மாதமும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.

இதில் 147 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான உஷார் நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், இந்த ஆண்டுக்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது.

இந்தப் போட்டிகளின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது.

போட்டிகள் நடைபெறும் இடங்களைப் போலவே, பிரம்மாண்டத் திரைகளில் கால்பந்துப் போட்டியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் கூடும் பகுதிகளிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தாக்குதல் நடத்த சதி: உக்ரைனில் ஒருவர் கைது

கீவ், ஜூன் 6:  பிரான்ஸில் யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்னரும், போட்டிகளின்போதும் 15 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக பிரான்ஸ் நாட்டவரை உக்ரைன் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புப் படைத் தலைவர் வசைல் கிரிட்ஸக் கூறியதாவது:

மசூதி, யூதக் கோயில், வரி வசூலிக்கும் அலுவலகங்கள், காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட 15 இலக்குகள் மீது தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியவரைக் கைது செய்துள்ளோம்.

அவரிடமிருந்து 5 இயந்திரத் துப்பாக்கிகள், 5,000-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், 2 பீரங்கி எதிர்ப்பு குண்டு வீசிகள், 125 கிலோ டி.என்.டி. வெடிபொருள், 20 முகமூடிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

No comments

Powered by Blogger.