துருக்கி குண்டுவெடிப்பில் 11 பேர் மரணம் - மன்னிக்கமுடியாத குற்றம் என்கிறார் எர்துகான்
கலவரத்தடுப்பு காவலர்களை சுமந்து சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி நகரமான இஸ்தான்புல்லின் ஆளுநர் கூறியுள்ளார்.
மேலும், கொல்லப்பட்டவர்களில் ஏழு அதிகாரிகள் இருந்ததாகவும், காவலர்களின் வாகனம் வெடிகுண்டு நிரப்பிய காரை தாண்டிய போது தொலைவிலிருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்கப்பட்டதாகவும் ஆளுநர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான், இது மன்னிக்க முடியாதது என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான தங்களது சண்டை இறுதிவரை தொடரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இஸ்தான்புல்லில் நடைபெறும் நான்காவது சம்பவம் இது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால், இஸ்தான்புல்லில் உள்ள பிபிசி செய்தியாளர், கடந்த காலங்களில் பாதுகாப்பு படை மீது குர்தீஷ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள் எனவும், தற்போதும் அவர்கள் மீதே சந்தேக பார்வை விழலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் போது, குர்தீஷ் தீவிரவாதிகள் துருக்கி தலைநகர் அங்காராவில் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல் ஒவ்வொன்றிலும், 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

Post a Comment