லிபிய கடற்கரையில் ஒதுங்கிய 104 உடல்கள்
லிபியாவின் ஸவாரா நகரையொட்டிய கடற்கரையில் 104 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கின.
இது தொடர்பாக, லிபியா நாட்டின் கடற்படை செய்தித் தொடர்பாளர் அயூப் காசிம் கூறியதாவது:
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டதாகக் கருதப்படும் படகு, மத்தியதரைக் கடலில் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. கடலில் மூழ்கிய 104 பேரின் உடல்கள் ஸவாரா கடற்கரையில் வியாழக்கிழமை ஒதுங்கின.
அகதிகள் படகில் குறைந்தபட்ச அளவாக 125 பேர் வரை பயணம் செய்கின்றனர். எனவே, மேலும் சில உடல்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருத இடமுள்ளது.
உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
அகதிகளின் உடல்களை உள்ளூர் பணியாளர்கள் உதவியுடன் மீட்டு, அவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
அகதிகள் பயணம் மேற்கொண்ட படகு குறித்து எந்த விவரமும் இல்லை என்றார் அவர்.
இதனிடையே, கிரீஸ் தீவான கிரீட்டியையொட்டிய ஏஜியன் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து, நீரில் தத்தளித்த சுமார் 340 பேரை கிரீஸ் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்த 4 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கானோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகு கவிழ்ந்த கடற் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் தந்த தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடலோரக் காவல் படையைச் சேர்ந்த இரு ரோந்துப் படகுகள், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைந்தனர்.
பல்வேறு படகு விபத்துகளில் இவ்வாண்டு மட்டுமே 2,500-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

Post a Comment