Header Ads



அரநாயக்கவில் மண்சரிவினால் 1 கிலோ மீற்றருக்கு அடித்துச்செல்லப்பட்ட சடலம் இன்று மீட்பு


(எம்.எம்.மின்ஹாஜ்)

அரநாயக்க மண்சரிவில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கான  பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள தருவாயில் இன்றைய தினம் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மண்சரிவினால் புதையுண்ட கிராமங்களில் ஒன்றான பல்லேபாகே பகுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கபட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 17 ஆம் திகதி அரநாயக்க பிரதேசத்திலுள்ள சாமசர மலையிலிருந்து மண்திட்டுகள்  சரிந்து விழுந்தன. இதனால் மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டன.

இதுவரைக்கும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இன்றைய தினம் பல்லேபாகே கிராமத்தில் வைத்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சடலமானது மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் மண்சரிவினால் அடித்து  செல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று அரநாயக்க மண்சரிவில் சிக்குண்ட சடலங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மீட்பு குழு முழுமையாக நிறுத்தியதாக இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இவ்வாறு  மீட்பு பணிகள் நிறுத்தப்பட்ட தருவாயிலேயே இன்று ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அரநாயக்க மண்சரிவினால் 200 க்கும் மேற்பட்டோர் புதையுண்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் தற்போதைக்கு 49 சடலங்களே  மீட்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.