மள்வானை வெள்ள அனர்த்த பணியில், காத்தான்குடி உறவுகளின் உயர்ந்த பங்களிப்பு
-Mbm Fairooz-
வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மள்வானை பிரதேசத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பான இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுவரும் காத்தான்குடி பிரதேச சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியாக நிவாரண பணிகளை முன்னெடுக்கும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள RCC (Relief Coordinating Centre) இன் வேண்டுகோளுக்கிணங்க நேற்று சனிக்கிழமை முதல் இப் பணிகளை காத்தான்குடி பிரதேச நிவாரணப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
மள்வானை பிரதேச தொண்டர்களின் உதவியுடன் நேற்று மாலை உலஹிட்டிவெல பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் முழுமையாக திரட்டப்பட்டு RCC இடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை ரக்ஷபான, காந்தியவளவ்வ ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 450 குடும்பங்களின் விபரங்களை சேகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, காத்தான்குடி சகோதரர்களின் அனுசரணையில் ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்து வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. இன்று ஞாயிற்றுக் கிழமை 'ஜபுருலுவ' எனும் சிங்கள கிராமத்தில் மருத்துவ முகாம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.
மேலும் வெள்ளம் வடிந்தோடிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இன்று முதல் சுத்திகரிப்பு பணிகளும் காத்தான்குடி சகோதரர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய வீடுகளும் கிணறுகளும் சுத்திகரிக்கப்படவுள்ளன.
இப்பணிகள் மேலும் சில தினங்களுக்கு தொடராக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment