ரொட்டி + பேக்கரி பொருட்களில் கேன்சர் விளைவிக்கும் ரசாயனங்கள்
பல ரொட்டி (பிரெட்) மற்றும் பேக்கரி பொருட்கள் கேன்சர் விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக கண்டுபிடித்துள்ள ஆய்வை அடுத்து, அதுகுறித்து இந்திய சுகாதார அமைச்சகம் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 84 சதவீத மாதிரிகளில், பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் ஐயோடேட் ஆகிய ரசாயன எச்சங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரசாயனங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவை இந்தியாவில் தொடர்ந்து பேக்கரிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரசாயனங்கள் ''பாதுகாப்பானதாக கருதப்படுகிறது'' என்று அனைத்து இந்திய ரொட்டி தயரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்றும் இந்த பிரச்சனையில் அமைச்சகத்தின் அறிக்கைக்காக காத்திருக்குமாறும் சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
‘’இது குறித்து உடனடியாக எனக்கு அறிக்கையை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மக்கள் பதட்டப்படதேவையில்லை. மிக விரைவாக விசாரணை அறிக்கை வெளியாகும்,''என்றார்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) என்ற டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சுழல் ஆய்வு அமைப்பு தனது அறிக்கையில் டெல்லியில் சில்லறை வணிக்க் கடைகள், பேக்கரிகள், மற்றும் துரித உணவு கடைகளில் இருந்து மொத்தம் 38 ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன என்று கூறியுள்ளது.
''84% சதவீதத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் ஐயோடேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,''என்றும் தெரிவித்துள்ளது.
''இந்த ராசாயனங்கள் தைராய்டு செயல்படுவதை பாதிக்கும்,'' என்று குறிப்பிட்ட இந்த மையம், பேக்கரி பொருட்களில் இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யுமாறு அரசை வலியுறுத்தியது.

Post a Comment