Header Ads



வெள்ளமும், நல்லாட்சி மீதான கோபமும்


-Zafar Ahmed-

அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவுதான் BBC,CNN உட்பட சர்வதேச மீடியாக்கள் அலறும். அதன் உளவு அமைப்புகளான CIA, FBI உசாராக மறு நாள் கட்டுநாயக்கவிற்கு ஒரு ப்ரைவட் விமானம் ஆர்ப்பாட்டமாய் வந்து இறங்கும்..

அமெரிக்கா மட்டுமல்ல கட்டார் , குவைத் உட்பட இந்த அரசாங்கம் ஒட்டி உறவு கொண்டாடும் மேற்கத்தேய நாடுகள் எல்லாமே தங்கள் நாட்டு பிரஜைகள் மேல் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தவல்லன.அவர்களிற்கு ஓர் உயிரின் மதிப்பு என்ன என்று என்று தெரியும்..

ஆனால் இங்கு நூற்றுக் கணக்கான மக்கள் வெள்ளப் பேரிடரில் சிக்கி கொல்லப்பட்டிருக்கின்றனர். கோடிக் கணக்கான சொத்துக்களை இந்த வெள்ளம் கபளீகாரம் செய்துள்ளது. இந்த அரசாங்கமோ, ஃபேஸ்புக்கில் வெள்ள நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் பற்றி பலரும் ஸ்டேடஸ் போடும் போது சம்பந்தமே இல்லாமல் காதல் கவிதைகளை எழுதிய கும்பல்கள் போல உருப்படி இன்றி இருக்கின்றது...

இது வரை பாதிக்கப்பட்ட மக்களிற்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.. ஜனாதிபதியின் மகள் எங்கோ வெறும் காலுடன் சுற்றித் திரிந்ததாய் சிலர் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றனர். பாவம்..அந்த காலை முள்ளு குத்தாமல் இருக்கட்டும்..

மல்வானை பகுதியில் இதுவரை ஒரு அரச அதிகாரியும் போய் என்ன நடந்தது என்று பார்க்கவே இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ,அரச சார்பற்ற நிறுவனங்களும் , நல்ல உள்ளம் கொண்ட வர்த்தகர்களும், சில மல்டி நேசனல் கம்பனிகளும், தான் இந்த வெள்ளத்தின் ஹீரோக்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த அரசின் ஆடை விலகி பறந்து போய் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிக்கம்பத்தில் மோதி இருக்கும்.

அந்த அளவுக்கு படு மெத்தனமாய் இருக்கிறது. இந்த அரசு. அதன் நல்லாட்சி கோசங்கள், எல்லாம் மூட்டை கட்டப்பட்டு களனிகங்கையில் எப்போதோ எறியப்பட்டுவிட்டன. வெள்ளத்தில் மல்வானைக்கோ,வெல்லம்பிட்டிக்கோ வந்தால் யாராவது பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம்...இப்படி ஒரு கையாலாகாத அரசு இதுவரை இலங்கையை ஆண்டதாக எனக்குத் தெரிந்தவரையில் இல்லை...

பாதிக்கப்பட்ட மக்களிற்காக வெறும் 150 மில்லியனை ஒதுக்கிவிட்டு பிரதமரின் கார் கொள்வனவுக்கு 600 மில்லியனை தாரை வார்க்கும் தேசத்தில் ஒருவருக்கு 225 ரூபா என்ற மகத்தான பிச்சை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதை வாங்க ஆட்டோவில் போய் வரிசையில் நிற்க வேண்டும். மனிதப் பேரவலத்தின் உச்சம்....

இதற்கிடையில் ஃபேஸ்புக்கில் சில திருக் கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. யாரோ ரெண்டு முஸ்லிம் அமைச்சர்கள் வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு போய் விசிட் அடிச்சதை அவர்களின் விசிலடிச்சான் குஞ்சுகள் ஏதோ படையப்பா ரிலீஸ் ஆன மாதிரி மாறி மாறி கொண்டாடித் தீர்த்தன. இந்த அரசியல்வாதிகளுக்கும் தமிழ் நாட்டில் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்ட வேளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய முதலைமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை...

கடைசியாய் ஒன்று மட்டும் சொல்ல முடியும்..இந்த வெள்ளம் ஒன்னே போதும்..இனிமேல் ஒரு தலைமையும் எமக்குத் தேவல்ல என்று உணர்ந்து கொள்ள... சாமானியர்களான எங்களுக்கே இந்த ஃபேஸ்புக் என்ற பிரமாண்ட ஊடகத்தை சிறப்பாய் கையாண்டு இவ்வளவு உதவி ஒத்தாசைகளை செய்ய முடியும்னா ஏகப்பட்ட அதிகரம், பணபலம், ஆட்பலம் என்று இருக்கும் இவங்க எவ்வளவு செய்திருக்கனும்...

இந்த கண்துடைப்பு நாடக திருவிழாக்கள் இனி சாத்தியமே இல்லை..இதே விழிப்புணர்ச்சி அரசியலிலும் எமது இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்பட்டால் சிகரங்கள் தொடலாம்....

3 comments:

  1. அரசு என்ற இயந்திரமே சமூகத்திலுள்ள அதிகார வர்க்கத்தினரை பாதுகாப்பதற்கு இருக்கும் கட்டமைப்புத்தானே தவிர கஞ்சிக்கில்லாத மக்களுக்குரியதல்ல என்பதைப்புரிந்துகொள்ளுங்கள்.

    ஒடுக்கப்படும் மக்களுக்காகவே தான் இருப்பது போல பாவனை செய்துகொண்டு இரகசியமாக அதிகார வர்க்கத்தின் நலன்களை மட்டும் கவனத்திற்கொண்டு செயற்படுவதுதான் முதலாளித்துவ அரசுகளின் யதார்த்தம்.

    ReplyDelete
  2. அடி சக்க.அப்பிடிப் போடு.

    ReplyDelete

Powered by Blogger.