Header Ads



தீமையான காரியங்கள், நோன்பினால் நிறுத்தப்படவில்லை என்றால்..?

-M. JAWFER JP-

அஸ்ஸலாமு அலைக்கும் - பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் -அல்ஹம்து லில்லாஹ்

எல்லாம் வல்லா அல்லாஹ் முதன்முதலில் மனிதனாக நம் தந்தை ஹஸ்ரத் ஆதம் (அலை)அவர்களை ஒரு முழுமையான முஸ்லிமாகவே படைத்தான். அவர்கள் மூலம் பல்கிப்பெருகியதுதான் மனித இனம். அந்த மனித இனம் முழுமையான மனிதனாக வாழ வேண்டும் என்ற நன்னோக்கத்தொடுதான் அல்லாஹ் காலத்துக்கு காலம் அவனின் தூதர்களாக அம்மனிதர்களில்  இருந்தே  தெரிவு செய்து நேர்வழி  காட்டினான். அந்த நேர் வழிகளில் தொடராக வந்ததில் தற்போது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள விடயங்களையும் அதில் நாமும் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சற்று நோக்குவோம். அதில்
(1)கலிமா ஷஹாதத் 
(2)தொழுகை
 (3)நோன்பு
 (4)zஸகாத்
 (5)ஹஜ்
நோன்பு 

இதில் நம் நிலைமை என்னவென்று  பார்த்தால்,தாராளமாக நோன்பு பிடிக்கிறோம் ஆனால் அந்த நோன்பு நம்மை நோன்பின் நேரத்தை கழிப்பதற்க்காக சினிமா பார்ப்பது,கிரிக்கட் பார்ப்பது,சீட்டு விளையாடுவது,தேவையற்ற பேச்சுக்களில் அதிகமாக ஈடுபட்டுக்கொண்டு நோன்பின் நேரத்தை போக்குவது என்ற தீமையான காரியங்கள் நம்முடைய நோன்பால் நிறுத்தப்படவில்லை .இங்கு அல்லாஹ் என்ன சொல்கிறான்.

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

இறையச்சம் அடைவதற்காகவே இந்த நோன்பை உங்கள் மீதும் கடமையக்கியுள்ளோம் என்ற ஒரு முக்கியமாதொரு விடயத்தை போடுகிறான்.இறையச்சமுடயவர்கள்தான் சொர்க்கம் புகுவார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.

இங்கு நமக்கு இறையச்சம் இருந்தால் நோன்புடன் சிறிய பெரிய பாவங்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை.பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமாக புறம் பேசுதல் நடைபெறுகிறது.குறிப்பாக சுபுஹு தொழுகையின் பின்னும் தராவீஹ் தொழுகையின் பின்னும்  பள்ளிவாசல்களின் வெளியில் கூட்டங்கூட்டமாக கூடி யாராவது ஜமா அத்துடைய அல்லது தராவீஹ் எட்டா? இருபதா? என்ற குறைகளை  கழுவுவது. இன்னும் சொல்லப்போனால் இனாமாக பள்ளியில் கொடுக்கும் கஞ்சி, ஈச்சம் பழம் கொடுத்த குறைகள் போன்றவற்றை எல்லாம் அலசி ஆராஞ்சிதான் ஒரு கூட்டம் வீட்டுக்கு போகும். இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது அல்லாஹ் இந்த நோன்பின் மூலம் நாம் அடைய வேண்டி எதிர்பார்த்த தக்குவா நம்மிடம் வரவில்லை என்பது.

ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக பார்த்தால் தனது  கடமையை செய்துள்ளேன் என்ற திருப்தியோடு வாழ்ந்தால் அதற்குரிய நன்மையை அடைந்துகொள்ள முடியும். அமல்கள் அனைத்தும் நிய்யத்தை பொறுத்தது.ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு கடமையும் அல்லாஹ்வுக்காக இஹ்லாசுடன் செய்யப்படும்போது அதன் நன்மையையும்,அதன் நற்கூலியுமான சொர்க்கத்தை அடைந்துகொள்ள முடியும் . 

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்புனித ரமலானை நாம் அனைவரும் தக்வாதாரியாக மாற  அருள் புரிவானாக. 

No comments

Powered by Blogger.