பனாமாவில் காணப்படும் சகல விடயங்களையும், மோசடியாக பார்க்க முடியாது - சம்பிக்க
பனாமா பத்திரத்தில் காணப்படும் சகல விடயங்களையும் மோசடியான முதலீடாக பார்க்க முடியாது எனவும் எவ்வாறாயினும் இது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 20 பில்லியன் டொலர் சட்ட விரோத நிதி பாவனை மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாகவும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;
இதற்கு முதல் இலங்கையிலிருந்து 2003 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த சட்ட விரோத நிதி பாவனை தொடர்பான அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட விரோத நிதி பாவனை மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் இலங்கைக்கு 20 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருந்தது. இதில் 2011 இலேயே அதிகமான சட்ட விரோத நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில விடயங்கள் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்டுள்ளதால் இது தொடர்பாக ஆதாரங்களை நிரூபிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் இது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விசாரணை நடைபெறுவதால் இதில் பல விடயங்கள் வெளி வரும். இதன்படி அரசாங்கம் சர்வதேச விசாரணை குழுவுடன் இணைந்து விசாரணை நடத்தும். இதேவேளை தற்போது பனாமா பத்திரத்தில் அந்த நிறுவனம் அதிகமாக சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்புகளையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் புலனாய்வு இதழியலாளர்கள், சர்வதேச கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கையர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 2013இல் சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தது. இதில் சகலதையும் சேர்த்தே பனாமா பத்திரத்தில் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் இன்னும் பல பெயர்கள் வருமென நாம் நம்புகின்றோம். சிலர் இதில் சட்டபூர்வமான வகையில் முதலீடு செய்தவர்களும் இருக்கலாம். வெளிநாட்டில் பலர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம். சுவிஸ் கணக்கு உள்ளிட்ட கணக்குகள் உள்ளன. இதில் சட்டபூர்வமானவை உள்ளன. வீரர்கள் போல் கதைக்கும் பலரின் கணக்குகள் இத்தாலி, லண்டன் போன்ற நாடுகளில் உள்ளன. அதனை சட்டத்திற்கு முரணானது எனக் கூற முடியாது.
பனாமா பத்திரத்தில் தகவல்கள் வெளியானதற்காக அவை அனைத்தும் மோசடியானது எனவும் கூற முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தாது நமக்கு அவை சட்ட விரோதமானது எனக் கூறமுடியாது. இதனால் அரசாங்கம் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டிலிருந்து எவ்வாறாயினும் மகிந்த காலத்தில் 20 பில்லியன் டொலர் வெளியில் போயுள்ளது. இது எப்படி போயுள்ளது என விசாரணை நடத்தியே ஆகவேண்டும். இதன்படி தற்போது வெளியாகியுள்ள பனாமா பத்திரங்களில் உள்ள விடயங்கள், இதற்கு முதல் வெளியான தகவல்கள் ஆகியன தொடர்பாக அரசாங்கத்தினால் முறையான விசாரணைகள் நடத்தப்படும்.

இவரின் கருத்துப்படி பார்த்தால் இவரின் பெயர் அந்த பட்டியலில் உள்ளது போல் தெரிகிறது
ReplyDelete