முஸ்லிம்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டு, தமது உரிமையைப் பாதுகாக்க வேண்டும் - சம்பந்தன்
-ARA.Fareel-
'முஸ்லிம்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்வதால் தொகுதிவாரியான கலப்புத் தேர்தல் முறை அவர்களது பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பாக அமையலாம். அதனால் முஸ்லிம்கள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு தமது பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
'முஸ்லிம்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நாமும் சிறுபான்மைச் சமூகம் என்ற ரீதியில் இது விடயத்தில் தேவையான உதவிகளை நல்கத் தயாராக இருக்கிறோம்' என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு கொழும்பிலுள்ள தபால் திணைக்கள தலைமைக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
'முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநித்துவ உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்காக நாமும் எம்மாலான உதவிகளை வழங்குவோம். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முஸ்லிம் லீக்கின் சேவைகள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் சென்றடைகின்றன.
வட, கிழக்கில் முஸ்லிம்களில் 1/3 பகுதியினர் வாழ்கின்றனர். ஏனைய 2/3 பகுதியினர் வட கிழக்குக்கு வெளியே வாழ்கிறார்கள். நாடெங்கும் பரந்துவாழும் முஸ்லிம்கள் தங்களது பிரதேசங்களில் தங்களது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டு சிறந்த விழுமியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளில் முஸ்லிம்கள் பங்காளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான அளவு உள்ளது என்றாலும் தேர்தல் முறையில் மாற்றங்கள் வரும்போது தொகுதிவாரியான கலப்பு முறைத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். கலப்பு தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு நன்மை பயக்குமா என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி புதிய பயணமொன்றினை ஆரம்பித்துள்ளது. இதில் நாமனைவரும் பங்காளராவோம். ஒன்றுபட்ட இலங்கையில் நாம் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழக் கூடியதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் மக்களது சகவாழ்வு அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இரு பெரும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமரும் ஒற்றுமையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நாட்டின் இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்றார்.
இரா.சம்பந்தன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் பி.எம்.பாரூக்கினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திரு.சம்பந்தன் அவர்களை இந்த நிகழ்வுக்கு அழைத்தமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
ReplyDelete