Header Ads



பயங்கரவாதத்தை தோற்கடித்து, உயிருடன் உள்ள, ஒரே தலைவருக்கு பாதுகாப்பு போதாது


இராணுவத்தினருக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள பொலிஸார் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சிகளை பெற்றவர்கள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, அதற்கு பதிலாக விசேட அதிரடிப்படைப் பிரிவு பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இராணுவத்தினரின் 50 பேரை கொண்ட இராணுவ அணி இன்றிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சிகளை பெற்றவர்கள் அல்ல.

உலகில் மிகவும் பயங்கரமான அமைப்பு என பெயரிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதத்தை தோற்கடித்த தலைவரான மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளதுடன் இதனை சாதாரண சமூகமும் புரிந்து கொண்டுள்ளது.

அத்துடன் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பை முற்றாக தோற்கடித்து தற்போது உலகில் உயிருடன் இருக்கும் ஒரே தலைவரும் மகிந்த ராஜபக்ச மாத்திரமே ஆவார்.

இதனடிப்படையில், நோக்கும் போது அவருக்கு விசேடமான முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட பயிற்சிகளை பெற்றவர்களும் நீண்டகால அனுபவங்களை கொண்டுள்ளவர்களுமான 50 இராணுவ அதிகாரிகளை ஒரே நேரத்தில் விலக்கிக் கொண்டமை மகிந்த ராஜபக்சவின் உயிர் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் நடவடிக்கையாகும்.

மகிந்த ராஜபக்சவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கி அவரது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல பொறுப்புக் கூட என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.