உகண்டா ஜனாதிபதியின், பதவியேற்பு நிகழ்வில் மகிந்தவும் பங்கேற்பு
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள உகண்டா நாட்டுத் தலைவரின் பதவியேற்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
உகாண்டா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக அவரது தனிப்பட்ட செயலாளர் உதித லொக்கு பண்டார் தெரிவித்துள்ளார்.
கடுமையான வாக்கு மோசடிகளின் அடிப்படையில் ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதி யோவேரி மூசெவேனி (Yoweri Museveni) தெரிவாகியுள்ளார். இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை உகண்டா ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்ட எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 30 வருடத்திற்கும் மேலாக உகாண்டாவை ஆட்சி செய்கின்ற யோவெரி முசெவேனி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் முசெவேனியின் ஆட்சியில் கடுமையான ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி மோசடி இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி பல சர்வதேச உதவி அமைப்புக்கள் உகாண்டாவுக்கான உதவியினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.
யோவெரி முசெவேனி 2012ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். 2013ஆம் ஆண்டு மஹிந்தவும் உகாண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது தந்தையுடன் உகாண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டிற்கமைய யோஷித ராஜபக்சவின் பயண கடவுச்சீட்டு நீதிமன்றினால் தடை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment