நோன்புகால இலவச பேரீச்சம்பழத்திற்கு, வரி விலக்களிக்க ஜனாதிபதி + பிரதமரிடம் கோரிக்கை
(ஏ.பி.எம். அஸ்ஹர்)
நோன்பு காலங்களில் முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழத்திற்கு அரசாங்கம் வரி விலக்களிக்க வேண்டுமெனக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் அவசரக் கோரிக்கை கடிமொன்றினை நேற்று (11) அனுப்பியுள்ளார்.
அக்கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- இவ்வருட ரமழான் நோன்பு காலம் அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரப்பமாகவுள்ள நிலையில் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிலுள்ள தனவந்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பொதுநல அமைப்புக்கள் என்பன நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், அரபு கலாசாலைகள், குர்ஆன் அரபு மதரஸாக்கள் மற்றும் வசதிகுறைந்த முஸ்லிம் மக்களுக்கென இலவசமாக பேரீச்சம் பழம் வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய வரி அதிகரிப்பின் காரணமாக அததைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களுக்கு இவ்வாறு கிடைக்கப்பெறும் பேரீச்சம் பழங்களை வழங்கி அவற்றின் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு அவை இலவசமாக வழங்கப்பட்டு நோன்பினை சிறப்பான முறையில் நேற்று வந்தனர். இதற்கு கடந்த கால அரசாங்கம் நோன்பு காலங்களில் இவ்வாறு வழங்கப்படும் பேரீச்சம் பழங்களுக்கு வரி விலக்களித்திருந்தது.
ஆனால், தற்போதைய வரி விதிப்பின் காரணமாக இலவசமாக முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள பேரீச்சம் பழத்தினை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கூடுதலான பணத்தினைச் செலுத்தி பேரீச்சம் பழத்தினை பெற்றுக்கொள்வதனைவிட அதனை உள்நாட்டிலே பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் புனித நோன்பு காலங்களில்மாத்திரம் சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ள பேரீச்சம் பழத்திற்கு வரி விலக்களித்து முஸ்லிம் மக்கள் தங்களது நோன்பினை சிறப்பாக நோற்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க வேண்டுமெனக் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

Post a Comment