Header Ads



தூஷணம் பேசிய தினேஸ், விமலுக்கெதிராக நடவடிக்கை..?

நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர், நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சபாநாயகரை ஆபாசமான வார்த்தையால் திட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன சபாநாயகரை பைத்தியம்... பைத்தியம்... என திட்டியுள்ளார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வன்முறை நிலை ஏற்பட்டது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தினேஷ் குணவர்த்தன செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட உறுப்பினரான அவர், மோதலை தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ளாமல் வன்முறையை துண்டும் வகையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாடாளுமன்ற செயலாளரை தவறான தாயாரின் மகன்.. என விமல் வீரவன்ச திட்டியுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் அநாகரியமாக நடந்து கொள்வதாகவும், அதன் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கமைய பாலித தெவரபெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை இதுவாகும்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்குவதற்காக நிலையியற் கட்டளையில் திருத்தம் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிலையியல் கட்டளையில் திருத்தம் ஏற்பட்டால், அதன்மூலம் தண்டனை பெறும் முதலாவது நபர்களாக விமல் வீரவன்ச மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் இருப்பார்கள் என நாடாளுமன்ற பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.