"சில பொருட்களை வெளிப்படையாக, வாய்திறந்து கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்"
வீடு, சொத்து, சுகம், பிறப்புச்சான்றிதழ் என அனைத்தையும் இழந்து நடு வீதியில் அகதிகளாக நிற்கிறோம். நாங்க கனவுல கூட நினைக்கல இப்படி ஒரு துயரத்தை அனுபவிப்போம் என்று. கடந்த ஆறு நாட்களாக ஒரே உடுப்போட இருக்கிறோம். சில பொருட்களை வெளிப்படையாக வாய் திறந்து கேட்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்டப்பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்லாமல் போய்விட்டது என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீதிகளிலும் விகாரைகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்றகால நிலை காரணமாக இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கொழும்பில் மாத்திரம் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கொழும்பின் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் விகாரைகளிலும் பாடசாலைகளிலும் என 84 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற காலநிலை கடந்த மூன்று நாட்களில் வழமைக்கு திரும்பியுள்ள போதும் மக்களின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. வீடுகள் இன்னமும் 6 அடி நீர்மட்டத்துக்குள் மூழ்கியுள்ளன.
வீடு, சொத்து, சுகம் என அனைத்தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக நாம், கொலன்னாவ மீதொட்டுமுல்ல, சேதவத்த, வெல்லம்பிட்டி, லன்சிவத்த, பெரண்டியா வத்த, நவகம்புர மற்றும் களனி உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தோம். களனி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக கொழும்பில் கடுமையான வெயில் காணப்படுகின்றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் 6 அடிக்குமேல் தண்ணீர் நிற்பதோடு குறித்தப் பகுதிகளில் கழிவு நீர் கலந்து கருநிறத்துடன் காணப்படுவதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
என்னுடைய பெயர் நியாஸ். மீதொட்டுமுல்ல பகுதியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றோம். கடந்த சில நாட்களாக பெய்த மழை எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதுவரையில் அரசாங்கத்துல இருந்து வந்து எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யல. உணவு கிடைப்பதுல எந்த பிரச்சினையும் இல்ல. எங்கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்ளப்பட்டு இருக்காங்க. எங்கட பெண்கள் ரொம்ப கஷ்டத்தை எதிர்கொள்ளுறாங்க. நாங்க எப்படியும் இருந்துட்டு போயிருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்தையால சொல்ல முடியாது. எங்கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்றிதழ் விவாகப் பத்திரம் பொருட்கள் என அனைத்தும் இல்லாமல் போய்விட்டன. தண்ணீரால சேதமான எங்கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்பார்க்கல இப்படி எல்லாத்தையும் இழப்போம் என்று. இந்த வான்கதவுகள திறக்கப்போறாங்கனு முன்னாடி சொல்லியிருந்தா உடுத்த உடுப்புகள சரி எடுத்துகிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்போட இன்னமும் இருக்கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்தாலும் அரசாங்கம் எங்களுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவலையுடன் தெரிவித்தார்.
சரீபா என்ற பெண் கருத்து தெரிவிக்கையில். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக நான் இங்கு இருக்கின்றேன். இதுவரைக்கும் இந்தமாதிரி ஒரு நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்கள வாங்குனேன். ஆனால் இன்றைக்கு எல்லாம் ஒன்றும் இல்லாம போயிருச்சு என்று கண்கலங்குகின்றார்..! என்னால கூட கதைக்க முடியல. அரசாங்கம் தான் எங்களுக்கு நல்ல தீர்வை பெற்றுதரனும்.
காந்தி என்ற சிங்கள பெண்மணி கருத்து தெரிவிக்கையில், நான் பஸ் டிப்போவுக்கு பக்கத்துல தான் இருக்கின்றேன். எனது வீடு முற்றாக நீரில் மூழ்கியிருச்சு. பொருட்கள் எல்லாமே இல்லாமல் போய்விட்டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்பித்த அவர் தன்னை அறியாமலே அழுகிறார். கண்ணீரை துடைத்துகொண்டு மீண்டும் கதைக்க ஆரம்பிக்கின்றார்.
தண்ணீர் கறுப்பு நிறமாக இருக்கின்றது. பக்கத்துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்துல இருந்து வந்த தண்ணீர்தான் எங்கட வீட்டுக்குள்ள இருக்கு. பொருட்களை எல்லாம் மீள எடுக்க முடியாது. சரியான துர்நாற்றம் அடிக்கின்றது. அந்த கிருமிநாசினிகள் நிறைந்த வீட்டுக்குள்ள போய் எவ்வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த எல்லாமே அழிந்து போய் விட்டது. நாங்க தேங்காய் துருவியில் இருந்து எல்லாமே புதிதாக எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
வசந்தி சந்தியானி ஜெயவர்தன என்ற பெண் கருத்து தெரிவிக்கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்போது சாப்பிடுவதற்கு ஒரு பீங்கான் கூட எங்களிடம் இல்லை. எங்களது குறைய தீர்க்க யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம். நான் நோயாளி. இந்த தண்ணீர பார்க்கும் போது உங்களுக்கு தெரிகிறது எவ்வளவு துர்நாற்றம் அடிக்கின்றது என்று. இதனால எங்களுக்கு நோய் தான் அதிகரிக்கின்றது. எங்களுக்கு சாப்பாடு மூன்று நேரமும் கிடைக்கின்றது. ஆனால் படுப்பதற்கு பாய், தலையணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடுதலாக தேவைப்படுகின்றது. நாங்க இப்ப நடு வீதில நிற்கிறோம். எங்களால தொழிலுக்கும் செல்ல முடியாமல் உள்ளது. எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என நொந்துகொள்கிறார்.
சேதவத்தை பகுதியைச் சேர்ந்த விமலசேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களை இடைநடுவே மறித்து பாதிக்கப்படாத நபர் எடுத்து செல்கிறார்கள். இது தொடர்பில் நகர சபை அவதானம் செலுத்த வேண்டும் என்கிறார்.
சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்தோடிய பின்னர் எங்கட வீட்டை கழுவுவதற்கு டெட்டோல், சவர்க்காரம் இது போன்றவற்றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்ணீர்ல நிறைய கிருமிகள் இருக்கின்றன என்கிறார்.
தண்ணீரால் நிறைந்திருக்கும் தனது வீட்டை பார்த்தவாறு இருந்த ரசேனி வின்துனி என்ற பாடசாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்விகற்கிறேன். எங்க வீடு முற்றாக நீர்ல மூழ்கிவிட்டது. எனது பாடசாலை புத்தகம், சப்பாத்து என எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. நான் இப்ப பாடசாலைக்கு போககூட வழியில்லாமல் இருக்கின்றேன். இந்த துயரத்துல இருந்து எப்ப மீளப்போகின்றோம் என்று எங்களுக்கு தெரியல என்றார்.
மிகவும் பரிதாப நிலையில் காணப்பட்ட சுவர்னா என்ற வயோதிப பெண் தனக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கும் போது நான் தூங்கிகொண்டிருந்த போது விடியற்காலை 3 மணியிருக்கும். திடீரென காலில் தண்ணீர் படுவது போல இருந்தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்ளது. என்னால் எனது பொருட்களை பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடையின்றி அநாதையாக நிற்கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடியுள்ளது. என்னால் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என கூறியவாறு அழுதார்.
கன்னத்தில் கையை வைத்துகொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்த ஜரீனாவை நாம் அணுகிய போது, கண்ணீர் சிந்துகின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்வாறு ஒரு மழை பெய்தது இல்ல. இப்படி ஒரு வெள்ளம் ஏற்படும் என நாங்க கனவுலையும் நினைக்கல. மீதொட்டுமுல்ல பகுதியில் 20 வருடத்துக்கு மேல இருக்கிறேன். இப்படி ஒரு வெள்ளம் வீடுகளுக்குள்ள வந்ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்டுல இருந்து வெளியேறிய போது உடுத்திருந்த உடுப்போட தான் இன்னமும் இருக்கின்றோம். அழுகின்றார்...! எங்களுக்கு சாப்பாடு கிடைக்குது. சில பொருட்கள எங்களாள வெளிப்படையாக கேட்க முடியாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படுவார்கள். இவைகள வாயால கேட்டுகொள்ள முடியாது. என்ன செய்வது என அழுதுகொண்டே தனது பேச்சை நிறுத்தினார். தண்ணீர் வழிந்தோடிய பின்னர் தனது வீட்டை கழுவிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
தண்ணீரால மூழ்கிய எங்கட வீட இப்பதான் கழுவிகிட்டு இருக்கின்றோம். வீட்டுக்குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்தியாலமாக கழுவிகிட்டு இருக்கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்டுக்குள்ள அட்டை மற்றும் சில கிருமிகள் இருந்தன. இதை சுத்தப்படுத்த முடியாமல் உள்ளது என்றார்.
தண்ணீர் நிறைந்து காணப்பட்ட ஒரு பகுதியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்தவர் போல தேடிக்கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரை நாம் அணுகி எதனை தேடுகின்றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழிகளை தேடிகொண்டிருக்கின்றேன். செல்லப் பிராணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்தளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்டையும் தூக்கிகொண்டு வந்து விட்டேன். ஆனால் எனது சேவலை காணவில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரியல என்கிறார் 60 வயதுடைய அய்சா.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அபயசிங்கராம விகாரையில் தங்கியிருக்கும் கொலன்னாவ நாகமுல்ல பகுதியைச் சேர்ந்த அந்தோனியம்மா தனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கியபோது, எங்கட வீடு முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. துர்நாற்றம் அடிக்கும் இந்த தண்ணீர்ல பாதிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் மீள கழுவி எடுப்பது பொய்யான விடயம். அனைத்தையும் இழந்து அகதிகளாக இருக்கும் எங்களுக்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்வதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழமையாகும் என்றார்.

This comment has been removed by the author.
ReplyDeleteநிவாரணப்பொருட்களை சேகரிப்போரும் விநியோகிப்போரும் இதுகுறித்து கவனத்தில்கொள்வது நல்லது.
ReplyDeleteஉணவுப்பொருட்களோடு சேர்த்து உள்ளாடைகளையும் பெண்களுக்கான சாதனங்களையும் அனுப்ப வேண்டும். இங்கே நாங்கள் இவற்றை அனுப்பி வைத்தாலும் கூட அதை கொண்டு சேர்க்கும் சகோதரர்கள் தேவைப்படும் இடங்களை உணர்ந்து சமயோசிதமாக அவற்றைக் கேட்காமலே வழங்கி வைத்தால்தான் உண்டு.
தயவு செய்து இதை உணர்ந்து செய்யுங்கள்.
கழத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும் மக்கள் செய்யும் அநியாயங்கள் 01. எதைக் நாங்கள் வேண்டுமா என்று கேட்டாலும் வாங்குவது அது எனக்கு இப்போது தேவையில்லை அல்லது இருக்கிறது என்று பெறாமல் விட்டால் மற்றவரக்ளுக்கு கொடுக்கலாம் 02 உணவுகளை அதழகம் பெற்றுவிட்டு அவைகளை தெரிவு செய்து கறிகளை மாத்திரம் எடுத்து விட்டு மற்றவைகளை வீசுவது இதனால் கிடைக்கப்பெறவேண்டிய பல மக்களுக்கு கொடுக்க முடியாமல் போனது (நான் இன்று ஓர் நபரை சந்தித்தேன் (uswatta area) அவருக்கு மூன்று நாட்களாக சமைத்த உணவு கிடைக்கவில்லையாம் என்றார்) அவர் சொல்வதில் உண்மையும் இருக்கலாம்
ReplyDeleteசகோதரிகலே கவலைப்படவேன்றாம் அலலாஹ்வின்மீது உருதியான நம்பிக்கைவைத்துக்கொல்லுங்கல் நிச்சயம் நல்லது நடக்கும்
ReplyDelete