உலகம் பூராவும் எம்மிடம் தொடர்புகொண்டு 'உங்கள் பாராளுமன்றத்தில் கள்ளவாக்கு போடப்பட்டுள்ளதாமே' என்கின்றனர்
பதினொரு அமைச்சுக்களுக்கான 55 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையில் கையெழுத்திட்டு சபாநாயகர் அனுமதி வழங்கினால் சபாநாயகர் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என பொது எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவி விலக வேண்டும் அப்பதவியை தொடர அவருக்கு தகுதியில்லையென்றும் பொது எதிர்க்கட்சி தெரிவித்தது.
பாராளுமன்ற குழு அறையில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே பொது எதிர்க்கட்சியினர் இதனை தெரிவித்தனர். பொது எதிர்கட்சியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்தன எம்.பி. குறிப்பிடுகையில்
கடந்த 5 ஆம் திகதி அரசாங்கம் திருட்டுத்தனமாக வாக்களித்து குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது. இது சட்டவிரோதமாகும். சபாநாயகருக்கு இது தொடர்பில் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கியிருந்த போதும் அது வழங்கப்படவில்லை.
தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு அக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் குறைநிரப்பு பிரேரணையில் கையெழுத்திட மாட்டேன் என சபாநாயகர் எம்மிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை மீறி சபாநாயகர் இப் பிரேரணையில் கையெழுத்திட்டு அனுமதி வழங்கினால் சபாநாயகர் நீதிமன்றம் செல்ல வேண்டி நேரிடும். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வாக்களிப்பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலகம் பூராவும் உள்ள பாராளுமன்றங்கள் எம்மிடம் தொடர்பு கொண்டு கேட்கின்றன . “உங்கள் பாராளுமன்றத்தில் கள்ளவாக்கு போடப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாமே” என வினவுகின்றனர். இது இலங்கையின் கௌரவத்திற்கு ஏற்பட்ட கரும் புள்ளியாகும்.
பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நாம் மிரட்டவில்லை. சுமுகமான பேச்சு நடத்தி சான்றுகளை ஆராய்ந்தோம். இதன்போது சம அளவில் வாக்குகள் கிடைத்திருப்பதை செயலாளர்கள் நாயகம் உட்பட இதர அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர் என்றார்.
விமல் வீரவன்ச எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்
பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குகளை எண்ணுவதில் பித்தலாட்டம் செய்து அரசுக்கு சார்பாக நடந்து கொண்டுள்ளார். எனவே அவர் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியில்லாதவர். அவர் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டது. எனவே அவர் கௌரவமாக தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேற வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத வேளையில் அரசின் பிரேரணையொன்றை தோற்கடிப்பதற்கு ஐ.தே.கட்சியில் ரணில் எதிர்ப்பாளர்கள் முயற்சித்தனரா என்ற சந்தேகமும் இப்பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ பிரச்சினையில்லை. ஆனால் உண்மையான மக்கள் பிரதிநிதிகளான எமக்கு மக்கள் மீது வரிகளை சுமத்தி ஆட்சியாளர்களின் சுகபோக நிதிக்கான பிரேரணைகளை நிறைவேற்ற இடமளிக்க முடியாது.
பாராளுமன்ற சம்பிரதாயங்களை இல்லாதொழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பிக்களை கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment