Header Ads



பாப்பரசருடன், அல் அஸ்ஹர் இமாம் சந்திப்பு


ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும், முஸ்லிம்களின் உயர்மட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்புகள் ஐந்து ஆண்டுகள் தடைப்பட்டிருந்த நிலையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் கெய்ரோவின் அல் அஸ்ஹர் பள்ளிவாசல் தலைமை இமாமை சந்தித்துள்ளார்.

முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் பங்கேற்கும் பாரிஸ் மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஷெய்க் அஹமது அல் தய்யிப் வத்திகானுக்கு கடந்த திங்களன்று விஜயம் மேற்கொண்டார். முன்னாள் பாப்பரசர் வெளியிட்ட சில கருத்துகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அல் அஸ்ஹர் கத்தோலிக்க திருச்சபையுடனான சந்திப்பை 2011இல் நிறுத்திக்கொண்டது. பாப்பரசர் பெனடிக்ட் முஸ்லிம்கள் தொடர்பில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதாக அப்போது அல் அஸ்ஹர் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் திங்களன்று இடம்பெற்ற அரை மணிநேர சந்திப்பின் ஆரம்பத்தில், “இந்த சந்திப்பு மிக முக்கியமானது” என்று பாப்பரசர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பே செய்தியை சொல்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2006இல் பாப்பரசர் பெனடிக்ட், 14ஆம் நூற்றாண்டின் பைசாந்திய பேரரசரின் குறிப்பொன்றை மேற்கோள்காட்டி, இஸ்லாம் வன்முறை கொண்ட மதம் என்பதை உணர்த்தும் வகையில் சில முஸ்லிம்கள் செயற்படுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்தே அல் அஸ்ஹர் மற்றும் வத்திகானுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும் இது தனது சொந்த கருத்து அல்ல என்று பாப்பரசர் பெனடிக்ட் தொடர்ந்து கூறி வந்தபோதும், முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

ஷெய்க் தையிப் மற்றும் பாப்பரசர் பிரான்ஸிஸ் இடையிலான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக வத்திக்கான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இரு தலைவர்களும் அன்பளிப்புகளை பரிமாறிக்கொண்டதோடு மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான பதற்றம் மற்றும் மோதல்கள் பற்றியும் பேச்சுவர்த்தை நடத்தினர். 

No comments

Powered by Blogger.